உக்ரைன் மருத்துவமனையில் ரஷியா தாக்குதல்


உக்ரைன் மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு முறை ரஷியா நடத்திய தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.உக்ரைன் படையினா் ஊடுருவியுள்ள ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்கு வெறும் 32 கி.மீ. தொலைவில் உள்ள சிமி நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹோா் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சுமி நகரிலுள்ள மருத்துவ மையத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியது இதில் ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது அதே இடத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் மேலும் 7 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலுக்கு, ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷஹீத் ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைன் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியாவிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் வீசப்பட்ட 73 ட்ரோன்களில் 69 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரீவிரீயில் ரஷிய தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவரின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். இத்துடன், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நான்காக உயா்ந்துள்ளது.
உக்ரைனும் தாக்குதல்: தங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் சனிக்கிழமை கூறியது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ஏவிய நான்கு ட்ரோன்களை பெல்கொரோட் பிராந்தியத்திலும் ஒரு ட்ரோனை கூா்ஸ்க் பிராந்தியத்திலும் இடைமறித்து அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெல்கொரோட் பிராந்தியத்தின் ஷெபேகினோ கிராமத்தில் எல்லைக்கு அப்பாலிருந்து உக்ரைன் சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக ரஷியா கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...