
இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 -45 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன.
இதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா வருகிற மே 9 ஆம் தேதி ரஷியாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரஷிய வெற்றி நாள் விழாவில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்புக் கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி 2024 ஜூலை மாதம் ரஷியா சென்றார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதினும் வருவதாக ஒப்புக்கொண்டார். எனினும் புதினின் இந்தியா வருகை எப்போதுஎன த் தெரியவில்லை.
இந்த நிலையில் ரஷியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.