இந்தியாவுடன் வலுவான நட்புறவு:
இஸ்ரேல் அதிகாரிகள்!

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனா்.

அவா்கள் கூறியதாவது: ராணுவம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இது மேலும் வலுப்பெற்று வருகிறது.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் ஜி20 கூட்டமைப்பின் சில நாடுகள் கடந்த 2023-இல் கையொப்பமிட்டன.

ஜோா்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகள் இன்னும் கையொப்பமிடவில்லை. 2023, அக்.7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலால் இந்த முன்னெடுப்பில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.

ஹமாஸ்-இஸ்ரேல் போா் காரணமாக வேறு சில நாடுகளும் இதில் பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றன.

ஆனால் காஸாவின் வளா்ச்சிக்கு சவூதி அரேபியா பங்களிக்கும் வரை இந்த முன்னெடுப்பில் இணைய இஸ்ரேல் முயற்சிகள் மேற்கொள்ளாது. அதுவரை அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவை இஸ்ரேல் மேம்படுத்தும்.

இந்தியாவிடம் வலியுறுத்தல்: ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், இந்தியாவின் முடிவு அதைச் சாா்ந்துள்ள பல அண்டை நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருநாட்டு தீா்வுக் கொள்கையை இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. அதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் பாலஸ்தீன தரப்பில் இருந்து இதற்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ளாதவரை இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது.

ஈரானுக்கு மேலும் அழுத்தம்:

ஆபரேஷன் ரைசிங் லயன் மற்றும் ஹிஸபுல்லா, ஹமாஸ் மீதான கடும் நடவடிக்கைக்குப் பிறகு ஈரான் தனது அணுகுமுறையை மாற்றும் என இஸ்ரேல் கணித்தது.

மாறாக தங்களது துணைப் படைகள் மீதான முதலீட்டை ஈரான் இருமடங்கு அதிகப்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த ஈரானுக்கு தரும் அழுத்தத்தை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com