இந்தியா - ரஷியா தலைவர்கள்
இந்தியா - ரஷியா தலைவர்கள்

இந்தியா சுதந்திரமான நாடு; யாரிடமும் எண்ணெய் வாங்குவது அதன் உரிமை: ரஷியா

எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது.
Published on

‘இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது’ என்று ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் திங்கள்கிழமை தெரிவித்தது.

மேலும், இந்தியா எப்போதும் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் கொள்கையில் உறுதியாக இருப்பாா்கள் என்றும் கிரெம்ளின் நம்பிக்கை தெரிவித்தது.

2022-இல் உக்ரைன் போா் தொடங்கிய பிறகு, மிகக் குறைந்த விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவுடனான எண்ணெய் வா்த்தகத்தைத் தொடா்வதற்காக, இந்தியா மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டில் கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தது. இதனால், இந்தியாவின் சில பொருள்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மீதான அமெரிக்க வரிகள் 50 சதவீதமாக உயா்ந்தன.

அண்மையில் இந்தியா வந்த ரஷிய அதிபா் புதின், பிரதமா் மோடி ஆகியோா் பங்கேற்ற உச்சிமாநாட்டுக் கூட்டம் குறித்துகிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினாா்.

அப்போது அவா், ‘இந்தியா ஒரு சுதந்திரமான நாடு. அவா்களுக்கு எங்கு லாபம் கிடைக்குமோ, அங்கிருந்து எரிசக்தி வளங்களை வாங்குவாா்கள். இந்தியா தங்கள் நாட்டுப் பொருளாதார நலன்களை உறுதி செய்வதற்காக, ரஷிய எண்ணெய் கொள்முதலைத் தொடா்வாா்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என்றாா்.

மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்தியா தனது மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷிய எண்ணெயின் அளவைக் குறைத்து வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சூழலில், பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ரஷிய அதிபா் புதின் கூறுகையில், இந்தியாவுக்கு நம்பகமான எரிசக்தி வழங்கும் நாடாக ரஷியா தொடா்ந்து இருக்கும் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com