ஈரான் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை!

ஈரானில் நீதிமன்ற வளாகத்திலேயே இரு நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் அலி ரசினி, முகமது மோஹிசே
சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் அலி ரசினி, முகமது மோஹிசே
Published on
Updated on
1 min read

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் இன்று நுழைந்த மர்மநபர் நீதிபதிகள் அலி ரசினி (71), முகமது மோஹிசே (68) ஆகியோர் தங்கியிருந்த ஓய்வறைக்குள் நுழைந்து அவர்கள் இருவரையும் தான் கொண்டுவந்த கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அந்த மர்மநபர் நீதிபதிகளை சுட்டுக்கொன்ற பின்னர் அதே துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு நபர் காயமடைந்தார்.

இதனை ஈரான் நீதித்துறையின் மிசன் செய்தி இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, உளவு, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராடியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த கொலைக்கான காரணம் முழுமையாகத் தெரியவில்லை என்றும் மர்மநபரின் அடையாளங்களை வெளியிடாமல் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று ஈரான் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி அலி ரசினி ஈரானின் நீதித் துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இதற்கு முன்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு அவரது வாகனத்தில் வெடிகுண்டு வைத்து அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி மோகிஷே 1980களில் நீதித்துறையில் நுழைந்து சிறைத் துறை நிர்வாகத்தில் பணியிலிருந்தபோது பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர் மீது கடந்த 2011-ல் ஐரோப்பிய ஒன்றியமும், 2019-ல் அமெரிக்காவும் மனித உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு தடைகளை விதித்தன.

நீதிபதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஈரானில் மிகக் குறைவு என்றாலும் சமீப ஆண்டுகளாக உயர் பொறுப்பில் இருக்கும் பலர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரானில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com