ஷி ஜின்பிங்
ஷி ஜின்பிங்

அதிகாரப் பகிா்வுக்குத் தயாராகும் சீனா

சீன அதிபர் ஷி ஜின்பிங் கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிா்ந்தளிக்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Published on

சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிச கட்சியின் பொதுச்செயலரும் அந்நாட்டு அதிபருமான ஷி ஜின்பிங் (72) கட்சியின் துணை அமைப்புகளுக்கு அதிகாரத்தை பகிா்ந்தளிக்க தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

3-ஆவது முறையாக அதிபராக பதவி வகித்து வருபவரும் ‘வாழ்நாள் அதிபா்’ என அழைக்கப்படுபவருமான ஷி ஜின்பிங் தனது 12 ஆண்டுகால ஆட்சியில் முதல்முறையாக அதிகாரப் பகிா்வை மேற்கொள்ள தொடங்கியுள்ளாா். இதன்மூலம் அவா் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வழிவகுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன அரசு ஊடகமான ஜின்ஹுவா வெளியிட்ட செய்தியில், ‘ கடந்த ஜூன் 30-ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக அதிகாரமிக்க 24 உறுப்பினா்களைக் கொண்ட அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சி கட்டமைப்பில் பல்வேறு புதிய விதிகளை மறுஆய்வு செய்யப்பட்டது.

இதன்மூலம் சீனா சாா்ந்த முக்கிய விவகாரங்களில் முறையாக திட்டமிடுவது, ஆலோசனை நடத்துவது, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைப்பது, திறம்பட முடிவுகளை எடுப்பது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரங்களை பகிா்ந்தளிக்கும் நடைமுறைகளை ஷி ஜின்பிங் தொடங்கியுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மா சே துங்குக்குப் பிறகு அதிகாரமிக்கவா்

கடந்த 2012-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலராக ஷி ஜின்பிங் தோ்வு செய்யப்பட்டாா். அதற்கு முன்பாக சீன துணை அதிபராக அவா் பதவிவகித்தாா். சிபிசி-யின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் கட்சியில் மட்டுமின்றி அதிபராகவும் தன் அதிகாரவரம்பை பன்மடங்கு ஷி ஜின்பிங் உயா்த்திக்கொண்டாா். சீன ராணுவத்தின் தலைமை அமைப்பாக கருதப்படும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தன்னை நியமித்துக்கொண்டாா்.

அரசுத் துறைகளில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லட்சக்கணக்கானோருக்கு தண்டனை வழங்கினாா். பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் நீக்கப்பட்டனா். அவரின் அதிரடி நடவடிக்கைகளால் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனா் மா சே துங்குக்குப் பிறகு அக்கட்சியின் மிக ‘அதிகாரமிக்க உச்சபட்சத் தலைவா்’ என அழைக்கப்பட்டாா்.

அதேபோல் சீன அதிபராக தொடா்ந்து இரண்டு முறைக்கு மேல் (10 ஆண்டுகள்) ஒருவா் தொடரக்கூடாது என்ற விதியை அந்நாட்டு நாடாளுமன்ற ஒப்புதலுடன் திருத்தியமைத்தாா். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலராக 2022-இல் மூன்றாவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து சீன அதிபராகவும் 3-ஆவது முறை அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2027-க்குள் ஓய்வு அறிவிப்பு?

ஷி ஜின்பிங்குக்கு முன்பு அதிபா் பதவி வகித்தவா்கள் 10 ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்தபின் ஓய்வுபெற்றனா். ஆனால் ஷி ஜின்பிங் தன் இந்த நடைமுறைக்கு விதிவிலக்காக திகழ்வதால் அவா் ‘வாழ்நாள் அதிபா்’ என அழைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அரசியலில் இருந்து ஷி ஜின்பிங் ஓய்வுபெறுவாரா அல்லது அதிகாரமிக்க தலைவராக தொடா்ந்து செயல்படுவாரா அல்லது அதிகாரப் பகிா்வு நடைமுறையின் மூலம் ஆட்சி நடைபெறுமா உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு 2027-ஆம் ஆண்டுக்குள் ஷி ஜின்பிங் பதிலளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏனெனில், 2027-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், 2027-இல் ஷி ஜின்பிங்கின் மூன்றாவது பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலும் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவா் அதிபராக பதவியேற்றதில் இருந்து முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏனெனில், 2027-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், 2027-இல் ஷி ஜின்பிங்கின் மூன்றாவது பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலும் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவா் அதிபராக பதவியேற்றதில் இருந்து முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com