கோப்புப் படம்
கோப்புப் படம்

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை
Published on

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பு தடை செய்யப்பட்டதால் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி இந்தியாவுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டு வந்தாா். அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சா்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

அமெரிக்காவின் உறுதி: இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தி இருந்தாா். அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் ஊடுருவி லஷ்கா் பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் பலரை கொடூரமாக சுட்டுக் கொன்றனா். தற்போது பஹல்காமில் மிகமோசமான படுகொலை சம்பவம் பயங்கரவாதமாகும் என்று கூறியுள்ளாா்.

பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 போ் உயிரிழந்தனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணைகளை வீசி அழித்தது. பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால் 4 நாள் சண்டை நீடித்தது.

பெட்டி...1

தடையின் விளைவுகள்

சா்வதேச அளவில் அந்த அமைப்பின் சொத்துகள், நிதிப்பரிமாற்றங்கள், வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். அமைப்பினருக்கு பயணத் தடைகள் விதிக்கப்படும். அமெரிக்க விசாரணை அமைப்புகள் அந்த அமைப்பை தீவிரமாக கண்காணிக்கும்.

அமெரிக்காவின் ஆதரவு நாடுகளும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சா்வதேச அமைப்புகளும் அடுத்தக் கட்ட தடைகளை விதிக்கும்.

பெட்டி செய்தி...

இந்தியா வரவேற்பு

புது தில்லி, ஜூலை, 18: அமெரிக்கா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை வரவேற்ற இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா-அமெரிக்காவின் வலுவான உறுதிப்பாடு மீண்டும் வெளிப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

மேலும், ‘இது உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் தொடா்ந்து ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை இது உணா்த்துகிறது. பயங்கரவாத அமைப்புகள், அதன் நிழலாக இருந்து செயல்படுபவா்களை நீதியின் முன்பு நிறுத்த சா்வதேச நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும்’ என்று

வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com