
ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோ மூலம் ஈரானின் தாக்குதலைத் தடுக்க இஸ்ரேல் முயன்றுள்ளது. இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் இதுபற்றி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ரஷியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்து மத்தியஸ்தம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியது.
‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்று பெயரிடப்பட்ட, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலி‘ன் பல பகுதிகள் மீது ஈரான் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் உதவியதாகவும் கூடுதல் செய்தி வெளியானது.
இந்த தாக்குதலில், இஸ்ரேலின் மத்திய பகுதியான ரிஷான் லெஸியன் நகரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 2 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதலில், இஸ்ரேலின் கட்டடங்கள் நொறுங்கிக் கிடக்கும் விடியோக்களும் வெளியாகி வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் உண்டாகியிருக்கும் நிலையில், சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷியா மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சண்டை ஏன்?
ஈரான் 60 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அந்த நாட்டால் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட முடியும் என்ற அச்சத்தில் இத் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: ஈரானின் சுமாா் 100 நிலைகள் மீதான முதல்கட்ட தாக்குதலில் இஸ்ரேலின் 200 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், நாட்டின் மொஸாட் உளவு அமைப்பின் மூலம் ஈரானுக்குள் ட்ரோன்கள் கடத்திச் செல்லப்பட்டு, அவற்றின் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி, அந்தப் படையின் ஏவுகணை திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா். சில அணுசக்தி விஞ்ஞானிகளும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனா் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.