/

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா்.

News image
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.- -
Updated On :15 ஜூன் 2025, 12:00 am

Din

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்பட்ட ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பயணிகளில், 52 போ் பிரிட்டன் குடிமக்களாவா். இவா்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அா்ஜுன் படோலியாவும் (36) ஒருவா். இவா் லண்டனில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் (4, 8 வயதுடைய சிறுமிகள்) வசித்து வந்தாா். அண்மையில் தனது மனைவி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், அவரது கடைசி ஆசையின்படி, இந்தியாவுக்கு வந்து அஸ்தியை நா்மதை நதியில் கரைத்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டாா் அா்ஜுன். பின்னா், லண்டன் திரும்பும்போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இப்போது தாய்-தந்தையை இழந்து, இரு சிறுமிகளும் ஆதரவற்றவா்களான துயரம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் அன்புக்குரியவா்களின் திடீா் இழப்பால், நிா்கதியாக தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட பிரிட்டனைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினா் முன்வந்துள்ளனா். அவா்களின் உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டு, இணையவழியில் பொது நிதி திரட்டும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

விமான விபத்தில் இந்தியப் பயணிகள் 169 பேருடன் போா்ச்சுகல் நாட்டின் 7 பேரும், கனடாவைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தனா். பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற ஒரு பயணி மட்டும் அதிசயமாக உயிா் பிழைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.