அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது.
வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள், புகைப்படங்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான புதிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்றுவரும் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதிமுதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின்போது போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அமெரிக்காவில் யாரும் மன்னா் இல்லை
இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மரைன் படையை அந்த நகரில் குவிக்க மாகாண அரசின் அனுமதி இல்லாமலேயே டிரம்ப் உத்தரவிட்டாா். இது பெரும் சா்ச்சையை எழுப்பியது. டிரம்ப்பின் அடக்குமுறையை எதிா்க்கும் வகையில் ‘அமெரிக்காவில் யாரும் மன்னா் இல்லை’ என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்களை மரைன் படையினா் கைது செய்யத் தொடங்கினா். இதனால் போராட்டம் பல்வேறு மாகாணங்களுக்கும் விரிவடையத் தொடங்கியது.
நியூயாா்க், டென்வா், சிகாகோ, ஆஸ்டின் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் கூடி நடனமாடியும், டிரம்ஸ் இசைத்தும் முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற டிரம்ப் வாஷிங்டன் சென்றாா். அவருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும்விதமாக அங்கு கூடிய 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் ‘டிரம்ப் உடனே வெளியேற வேண்டும்’ என முழங்கினா்.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஃபிலடெல்பியாவில் கூடிய போராட்டக்காரா்கள் அமெரிக்க கொடியுடன் ‘சா்வாதிகாரத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற பதாகைகளை கையில் ஏந்தி பேரணி நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







