
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதுகிறது. இதையடுத்து ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தாக்குதல் தொடா்ந்து 3-ஆவது நாளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட 406 பேர் பலியானார்கள். அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் அறிக்கையின்படி, நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு தனது காதலி அமித் யார்தேனியை இன்று திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.
இதையொட்டி டெல் அவிவ் நகரைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம் இஸ்ரேலியர்கள் சிலர் காஸாவில் பணயக்கைதிகளாக இன்னும் உள்ள நிலையில், பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதைத்தொடர்ந்து நெதன்யாகுவின் மகன் திருமணம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.