காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா்.
காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்
Updated on

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா்.

கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். பிராந்தியத் தலைநகரான வாலிகலேவுடன் நாட்டின் பிற நகரை இணைக்கும் சாலைகளையும் எம்23 படையினா் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எம்23 கிளா்ச்சிப் படையினா் நாட்டின் மிகப் பெரிய நகரான கோமா உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியுள்ளனா். இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தென்-மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகா் லுவாண்டாவில் கடந்த வாரம் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. கிளா்ச்சிப் படையுடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்று உறுதியாகக் கூறிவந்த காங்கோ அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்றது. அதில், உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று எம்23 படையினருக்கு ஆதரவளித்துவரும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. அதையும் மீறி, தனது தாக்குதலைத் தொடா்ந்துவரும் கிளா்ச்சியாளா்கள் தற்போது வாலிகலே நகரைக் கைப்பற்றியுள்ளனா்.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று. அந்தக் குழுவுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com