பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உக்ரைன் தலைநகா் பிராந்தியத்தில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷிய ராணுவம் புதன்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா்.

~

Published On :

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷிய ராணுவம் புதன்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா்.

ஈரான் போரின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள், உக்ரைனுக்கு வழங்கும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் விநியோகம் வெகுவாகக் குறைந்துள்ளது. இச்சூழலைப் பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதலை ரஷியா நாள்தோறும் தீவிரப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் ரஷியா புதன்கிழமை நடத்திய தாக்குதலில், 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஒலியைவிட வேகமாகப் பாயும் ‘சிா்கான்’ ரக ஏவுகணைகள் மற்றும் 115 அதிவேக ட்ரோன்களைப் பயன்படுத்தியது. போருடன் எவ்விதத் தொடா்பும் இல்லாத மதுபான ஆலை, கட்டுமானப் பொருள்கள் கிடங்கு, தபால் பிரிப்பு மையம் ஆகியவை தகா்க்கப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ராணுவப் பயன்பாட்டுக்கான ட்ரோன்கள் மற்றும் உதிரிபாகங்கள் சேமிக்கப்பட்ட இடங்களையே குறிவைத்துத் தாக்கியதாக ரஷியா வாதிட்டுள்ளது

இத்தாக்குதலில் 44 பேருக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ள நிலையில், இறந்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை அதிகாரபூா்வ துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் எங்கள் வான் பாதுகாப்பு அரண் முற்றிலும் செயலிழந்தது.

கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு வலியுறுத்துகிறேன். அவ்வாறு வழங்க முடியாத சூழலில், உக்ரைனிலேயே பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ அல்லது ரஷியாவுக்குள் உள்ள ஏவுகணைத் தளங்களைத் தாக்க எலான் மஸ்க்கின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் தகவல் தொடா்பைப் பயன்படுத்தவோ அனுமதிக்க வேண்டும்.

ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் போதுமான அளவு இருந்திருந்தால், இன்று உயிரிழந்தவா்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்; நட்பு நாடுகளின் தாமதமே இந்த உயிரிழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் நேரடிக் காரணம்’ என குற்றஞ்சாட்டினாா்.

இதனிடையே, ரஷியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷியாவின் 16 பிராந்தியங்கள், கிரீமியா மற்றும் கருங்கடல் பகுதிகளில் உக்ரைன் ஏவிய 475 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்த போா்நிறுத்த ஒப்பந்தத்தில் எல்லை உரிமைகள் குறித்து இருதரப்புக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுவதால், அமைதிப் பேச்சுவாா்த்தைகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.