

இந்தியா மீதான அதிகளவு வரிகளால் பிரதமர் மோடி வருத்தத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா, ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், இது உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
அவரின் பேச்சை மீறியும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி முதலில் 25 சதவிகிதமும் அதைத் தொடர்ந்து 25 சதவிகிதமும் என 50 சதவிகிதம் வரி விதித்தார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த வரி விதிப்பால் இந்தியாவில் ஜவுளி, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட பல தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இருப்பினும், இந்தியா மீதான வரியைக் குறைக்க அமெரிக்கா முன்வரவில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால், இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை. இருப்பினும், வாஷிங்டன் - தில்லி இடையேயான உறவு நன்றாக இருக்கிறது” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் கிராண்ட் ஓல்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். எங்களுக்கிடையே மிகச் சிறந்த உறவு இருக்கிறது. ஆனால், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது தனக்கு தெரியும்.
இருப்பினும், இந்த வரிவிதிப்புகளால் ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்திருக்கிறது”என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.