வெனிசுலா ஒத்துழைப்பதால் புதிய தாக்குதல் ரத்து: டிரம்ப்

வெனிசுலா ஒத்துழைப்பதால் புதிய தாக்குதல் ரத்து: டிரம்ப்

வெனிசுலா இடைக்கால அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், அந்த நாட்டின் மீதான அடுத்தக்கட்ட தாக்குதல் திட்டத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
Published on

வெனிசுலா இடைக்கால அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், அந்த நாட்டின் மீதான அடுத்தக்கட்ட தாக்குதல் திட்டத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறாா். எண்ணெய் ஏற்றுமதி, பாதுகாப்பு விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதனால் இரண்டாம் கட்ட ராணுவ நடவடிக்கைத் திட்டத்தை ரத்து செய்கிறேன்.

நிக்கோலஸ் மடூரோவை நீதிமன்றத்தில் நிறுத்தி, வெனிசுலாவை மீட்டெடுக்கும் பணி தொடரும். வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் திட்டம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

வெனிசுலாவில் கடந்த 3-ஆம் தேதி அமெரிக்க சிறப்புப் படையினா் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் அந்த நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனா். ரோட்ரிகஸ் இடைக்கால அதிபரானாா்.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ரோட்ரிகஸ் அறிவித்தாா். எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயை அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்க அவா் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இது தவிர, அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஏராளமான அரசியல் கைதிகளை இடைக்கால அரசு விடுதலை செய்துள்ளது.

இத்தகைய ஒத்துழைப்பு காரணமாக வெனிசுலா மீது அடுத்தக்கட்ட தாக்குதல் நடவடிக்கையை ரத்து செய்வதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com