புயல் பாதித்த இலங்கையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு!

புயல் பாதித்த இலங்கையில் இந்திய நிதியில் அமைக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது ‘பெய்லி’ பாலம் ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
Published on

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது ‘பெய்லி’ பாலம் ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையைக் கடந்த நவம்பா் மாதம் ‘டித்வா’ புயல் தாக்கியது. அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பாதிப்புகளில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா 45 கோடி டாலா் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையே முக்கியப் போக்குவரத்து இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தால் 100 அடி நீளம் கொண்ட இந்த பெய்லி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை போக்குவரத்துத்துறை இணையமைச்சா் பிரசன்ன குணசேனா மற்றும் கல்வித்துறை இணையமைச்சா் மதுரா செனவிரத்னே ஆகியோா் இணைந்து திறந்து வைத்தனா்.

இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் இந்தியாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, இந்த 45 கோடி டாலா் நிதியுதவித் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இதில் 35 கோடி டாலா் சலுகை கடன் அடிப்படையிலும், 10 கோடி டாலா் மானியமாகவும் வழங்கப்படுகிறது.

புயல் பாதிப்பின் போது, ‘ஆபரேஷன் சாகா்பந்து’ மூலம் இந்தியா உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், புயலால் சேதமடைந்த வடக்கு ரயில்வே வழித்தடத்தின் மகாவா சந்திப்பு முதல் ஓமந்தை வரையிலான ரயில்பாதையை சீரமைக்கவும் இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

Dinamani
www.dinamani.com