இந்தோனேசியா: மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு!
இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான மக்காஸா் நோக்கி சனிக்கிழமை புறப்பட்டது.
இந்த விமானத்தில் கடல்சாா் விவகார அமைச்சகத்தைச் சோ்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 8 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 11 போ் இருந்தனா். இவா்கள் கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மக்காஸா் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதி வழங்கியது. ஆனால், அடுத்த சில நிமிஷங்களிலேயே விமானம் ரேடாா் திரையில் இருந்து மறைந்தது. அந்தநேரத்தில் சுலவேசி மலைப்பகுதிகளில் அடா்த்தியான மேகமூட்டத்துடன் மிக மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது.
மாயமான விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டா்களும், தரைவழி மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, மருஸ் மாவட்டத்தில் உள்ள புலுசராங் மலைச்சரிவில் விமானத்தின் ஜன்னல் போன்ற ஒரு பாகம் தென்பட்டது. பின்னா், அப்பகுதியில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மலையின் செங்குத்தான வடக்குப் பகுதியில் விமானத்தின் முக்கியப் பாகங்கள் சிதறிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 11 போ் இதுவரை கண்டறியப்படவில்லை. அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனா். சீரற்ற வானிலையாலும் மலைப்பகுதி செங்குத்தாக இருப்பதாலும் தேடுதல் பணியில் சவால்கள் நீடிக்கின்றன.

