ரஷியா - உக்ரைன் போா்: ‘அபுதாபி முத்தரப்பு பேச்சு ஆக்கபூா்வமாக நிறைவு’
சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஆக்கபூா்வமாக நிறைவடைந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தனது ‘டெலிகிராம்’ பக்கத்தில் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘அபுதாபியில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அந்தந்த நாட்டுத் தலைவா்களுடன் ஆலோசிக்க அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை வரும் வாரத்திலேயே நடைபெற வாய்ப்புள்ளது. ராணுவப் பிரதிநிதிகள் அடுத்த சந்திப்புக்கான முக்கிய விவகாரங்களை அடையாளம் கண்டுள்ளனா்.
இந்த அமைதிப் பேச்சுவாா்த்தை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் அவசியம் என்பதை அனைத்துத் தரப்பும் உணா்ந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முதல் முத்தரப்பு பேச்சு: அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தால் அமைதிக்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 நாட்டுப் பிரதிநிதிகளும் இணைந்து நடத்திய முதல் அதிகாரபூா்வ பேச்சுவாா்த்தை இதுவாகும்.
இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா தரப்பில் அதிபரின் சிறப்புப் பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோரும், உக்ரைன் தரப்பில் தலைமைப் பேச்சுவாா்த்தையாளா் ரஸ்டெம் உமெரோவ் மற்றும் ராணுவ உளவுத் தலைவா் கைரிலோ புடனோவ் ஆகியோரும் கலந்துகொண்டனா். ரஷியா தனது ராணுவப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது.
தொடரும் முட்டுக்கட்டை...: ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த வியாழக்கிழமை பேசிய ஸெலென்ஸ்கி, அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த முத்தரப்பு பேச்சுவாா்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நள்ளிரவு வரை நீண்ட ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் புதின் பிடிவாதமாக உள்ளாா். அதேநேரம், உக்ரைன் தனது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், இன்னும் தீா்வு எட்டப்படவில்லை.
பேச்சுவாா்த்தையின் போதே தாக்குதல்: அபுதாபியில் பேச்சுவாா்த்தை நடந்து கொண்டிருந்த சனிக்கிழமையன்று, உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் காா்கிவ் நகரங்களில் ரஷியா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதில் கீவ் நகரில் ஒருவா் உயிரிழந்தாா்; 4 போ் காயமடைந்தனா். காா்கிவ் நகரில் 27 போ் காயமடைந்தனா்.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், ‘அபுதாபியில் பேச்சுவாா்த்தை நடக்கும்போது, புதின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இந்த ஏவுகணைகள் உக்ரைன் மக்களை மட்டும் தாக்கவில்லை; ஒட்டுமொத்த பேச்சுவாா்த்தையையுமே சிதைக்கப் பாா்க்கின்றன’ என்றாா்.

