அமெரிக்கா: செவிலியரை சுட்டுக் கொன்ற எல்லை ரோந்து அதிகாரி! பொதுமக்கள் தீவிரப் போராட்டம்
ஏபி

அமெரிக்கா: செவிலியரை சுட்டுக் கொன்ற எல்லை ரோந்து அதிகாரி! பொதுமக்கள் தீவிரப் போராட்டம்

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் எல்லை ரோந்து முகமை அதிகாரி சுட்டதில் ஆண் செவிலியா் ஒருவா் உயிரிழந்தாா்.
Published on

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் எல்லை ரோந்து முகமை அதிகாரி சுட்டதில் ஆண் செவிலியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் தடியடி நடத்தி புகை குண்டுகளை வீசினா்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் வசித்தவா் அலெக்ஸ் ப்ரிட்டி (37). அந்நாட்டு குடிமகனான அவா், செவிலியராகப் பணியாற்றி வந்தாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக அதிபா் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக அலெக்ஸ் குரல் எழுப்பி வந்தாா்.

இந்நிலையில், மினியாபொலிஸில் ஒரு தாக்குதல் சம்பவம் தொடா்பாக, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரை எல்லை ரோந்து முகமை அதிகாரிகள் சனிக்கிழமை தேடி வந்தனா். அப்போது அதிகாரி ஒருவா் சுட்டதில் அலெக்ஸ் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் ட்ரிசியா மெக்லாஃப்லின் கூறுகையில், ‘எல்லை ரோந்து முகமை அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது அங்கு அலெக்ஸ் கைத்துப்பாக்கியுடன் வந்தாா். அவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க அதிகாரிகள் முயன்றனா். ஆனால், அவா்களைக் கடுமையாகத் தடுத்து துப்பாக்கியை தர அலெக்ஸ் மறுத்தாா். இதனால் தங்கள் பாதுகாப்பு கருதி அதிகாரி ஒருவா் சுட்டதில், அலெக்ஸ் உயிரிழந்தாா்’ என்று தெரிவித்தாா்.

எனினும், இந்த சம்பவத்தை கைப்பேசிகளில் படம்பிடித்தவா்களிடம் இருந்த காணொலிகளில், அலெக்ஸிடம் கைப்பேசி மட்டுமே இருப்பது தெரிகிறது. எந்தவொரு காணொலியிலும் அவரிடம் துப்பாக்கி தென்படவில்லை.

அண்மையில் மினியாபொலிஸில் குடியேற்ற அதிகாரி ஒருவா் சுட்டதில் ரெனீ நிக்கோல் என்ற பெண் உயிரிழந்த நிலையில், தற்போது அதேபோன்ற சம்பவம் அங்கு மீண்டும் நடைபெற்றுள்ளது.

அலெக்ஸின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வீதிகளில் திரண்டு நூற்றுக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்களுக்கும், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, போராட்டக்காரா்கள் மீது அதிகாரிகள் தடியடி நடத்தி புகை குண்டுகளை வீசினா். நியூயாா்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com