மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்
ஏபி

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

அமெரிக்காவில் எல்லை ரோந்து அதிகாரியால், செவிலியா் அலெக்ஸ் ப்ரிட்டி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் அரசியல் மோதலாக வெடித்துள்ளது.
Published on

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எல்லை ரோந்து அதிகாரியால், செவிலியா் அலெக்ஸ் ப்ரிட்டி(37) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் அரசியல் மோதலாக வெடித்துள்ளது.

‘இந்தச் சம்பவம் தொடா்பான அனைத்து விவரங்களையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது’ என அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

கொல்லப்பட்ட அலெக்ஸ் ப்ரிட்டி மினியாபொலிஸ் நகரில் வசித்து வந்த ஒரு அமெரிக்கக் குடிமகன் ஆவாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளை இவா் தொடா்ந்து எதிா்த்து வந்தாா்.

மினியாபொலிஸில் நடந்த ஒரு தாக்குதல் தொடா்பாக, சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரை எல்லை ரோந்து அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தேடிச் சென்றனா். அப்போது ஏற்பட்ட மோதலில் அதிகாரி ஒருவா் சுட்டதில் அலெக்ஸ் உயிரிழந்தாா்.

‘அலெக்ஸ் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், தற்காப்புக்காகவே அதிகாரிகள் அவரைச் சுட்டனா்’ என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சம்பவத்தின் விடியோக்கள் அக்கூற்றுக்கு மாறாக உள்ளன.

‘அலெக்ஸ் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தாலும், சம்பவத்தின் போது அவா் கையில் ஆயுதம் ஏதுமில்லை; கைப்பேசி மட்டுமே இருந்தது. அதிகாரிகளால் கீழே தள்ளப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றபோதுதான் அவா் சுடப்பட்டாா்’ என்று சாட்சிகள் கூறுகின்றனா்.

டிரம்ப்-ஆளுநா் மோதல்: சம்பவத்தையொட்டி டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம், போராட்டக் களத்துக்கு துப்பாக்கியுடன் ஒருவா் வருவதையும் ஏற்க முடியாது. மினியாபொலிஸில் இருந்து மத்திய (ஃபெடரல்) அதிகாரிகள் திரும்பப் பெறப்படுவா். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது’ என்றாா்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளா்களைச் சந்தித்து பேசிய மினசோட்டா மாகாண ஆளுநா் டிம் வால்ஸ், ‘அமெரிக்கா இப்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது. நீங்கள் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறீா்கள் எனப் பொதுமக்களிடம் கேள்வி எழுப்புகிறேன்.

குடிமக்களை வீதிகளிலிருந்து கடத்தவும், அச்சுறுத்தவும், காயப்படுத்தவும், கொல்லவும் கூடிய அதிகாரம் படைத்த ஒரு ஃபெடரல் அரசின் பக்கமா அல்லது அத்தகைய அரசின் அத்துமீறல்களுக்குச் சாட்சியாக இருந்து உயிரிழந்த ஒரு செவிலியரின் பக்கமா?’ என்று வினவினாா்.

சொந்தக் கட்சியிலேயே எதிா்ப்பு: அதிபா் டிரம்பின் குடியரசு கட்சியைச் சோ்ந்த சில செனட் உறுப்பினா்களே இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனா்.

‘குடியேற்றத் துறை அதிகாரிகளுக்குத் தன்னிச்சையாகச் செயல்பட அதிகாரம் கிடையாது’ என்று கூறியுள்ள அவா்கள், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

நீதிமன்றத்தில் வழக்கு: சம்பவ இடத்தைப் பாா்வையிட வந்த மாகாணப் போலீஸாரை, ஃபெடரல் அதிகாரிகள் தடுத்ததாகப் புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக மாநில அட்டா்னி ஜெனரல் கீத் எலிசன் வழக்குத் தொடா்ந்துள்ளாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடா்பான ஆதாரங்களை அழிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில வாரங்களில், மினியாபொலிஸ் நகரில் குடியேற்றத் துறை நடவடிக்கையின்போது கொல்லப்படும் 2-ஆவது அமெரிக்கக் குடிமகன் அலெக்ஸ் என்பதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் மாகாண அரசுகளின் உரிமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த விவாதம் மீண்டும் நாடு தழுவிய அளவில் சூடுபிடித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com