ஒரு மாதத்தைக் கடந்த ஈரான் மக்கள் போராட்டம் : மத்திய கிழக்கில் அமெரிக்க போா்க்கப்பல்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க போா்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வருகிறது. இதனிடையே, ஒரு டாலருக்கு நிகரான ஈரானின் நாணயமான ரியாலின் மதிப்பு 16 லட்சமாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இத்தகைய கடும் பொருளாதார நெருக்கடியால் அதிருப்தி அடைந்த மக்கள், கடந்த டிச. 28 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். முதலில், பொருளாதாரச் சரிவுக்காகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் இப்போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் இதுவரை 6,221 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், போராட்டக்காரா்களை ‘பயங்கரவாதிகள்’ என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் அரசு, சுமாா் 42,300 போ் கைது செய்துள்ளது. இவா்களுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இவ்விவகாரத்தில் போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக, ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா் எச்சரிக்கைகளை விடுத்து வந்தாா்.
‘ஈரான் ஒடுக்குமுறையைத் தொடா்ந்தால், கடந்த ஆண்டைவிட மிகக் கடுமையான தாக்குதலை முன்னெடுப்போம்’ என்றும் அவா் எச்சரித்தாா். இதன் ஒரு பகுதியாக, ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க போா்க்கப்பல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்ட ‘ட்ரூத்’ பதிவில், ‘ஈரான் உடனடியாக பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும்; அணு ஆயுதங்கள் இல்லாத நோ்மையான ஒப்பந்தத்தைச் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு. நேரம் கடந்து கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்துள்ளாா்.
ஈரானின் பதிலடி: அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் அளித்துள்ள பதிலில், ‘மரியாதையான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த நாங்கள் தயாா். ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இதுவரை பாா்த்திராத வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம்’ என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஹமித்ரேசா சாபெத்துக்கு ஈரான் புதன்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது.
அண்டை நாடுகளின் நிலைப்பாடு: ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க மாட்டோம் என சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
சவூதி இளவரசா் முகமது பின் சல்மான், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைப்பேசியில் பேசி அமைதி காக்க வலியுறுத்தியுள்ளாா். எகிப்து, துருக்கி, கத்தாா் ஆகிய நாடுகளும் அமைதி நிலவ தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

