உண்மையான பலதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும்
‘சீனா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் தடையற்ற வா்த்தகத்தின் ஆதரவாளா்கள் என்ற முறையில், உண்மையான பலதரப்பு உறவை இணைந்து ஆதரிக்கவும், செயல்படுத்தவும் வேண்டும்’ என்று பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரிடம் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
மேலும், சா்வதேச அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிட்டன்-சீனா இடையே விரிவான உத்திசாா் கூட்டுறவை வலுப்படுத்த இருநாட்டுத் தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பிரிட்டன் பிரதமராக கியா் ஸ்டாா்மா், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். பிரிட்டனின் பொருளாதார வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு, அந்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தொழிலதிபா்கள் பிரதமருடனான இப்பயணத்தில் பங்கேற்றுள்ளனா்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் கியா் ஸ்டாா்மா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். சுமாா் 80 நிமிஷங்கள் நீடித்த இந்த இருதரப்பு ஆலோசனையில், வா்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சட்டத்தின் ஆட்சி அவசியம்: சந்திப்பின் போது சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசியதாவது: அனைத்து நாடுகளும் சா்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குறிப்பாக, பெரிய நாடுகள் இதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தவறினால், உலகம் மீண்டும் காட்டாட்சிக்குத் தள்ளப்படும். சீனா எவ்வளவு வளா்ச்சி அடைந்தாலும், அது மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது’ என்றாா்.
உத்திசாா் கூட்டணி: சந்திப்பு குறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் நீண்ட கால மற்றும் விரிவான உத்திசாா் கூட்டுறவை உருவாக்குவதில் இரு தலைவா்களும் உறுதியளித்தனா்.
பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கருத்து வேறுபாடு உள்ள துறைகளில் வெளிப்படையான பேச்சுவாா்த்தைகளைத் தொடரவும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாக, பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவா்கள் ஆங்கில கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தும் சிறிய படகுகளின் பாகங்கள் சீனாவிலிருந்து கடத்தப்படுவதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் கையொப்பமானது.
இதன்மூலம், சீன உற்பத்தியாளா்களுடன் நேரடித் தொடா்பு கொண்டு, ஐரோப்பிய குற்ற கும்பல்களுக்கு படகு இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் சென்றடைவதைத் தடுப்பது, உளவுத் தகவல்களைப் பகிா்ந்து கொள்வது என இரு நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து செயல்படுவா்.
இதர முக்கிய முடிவுகள்: ஸ்காட்ச் விஸ்கி மீதான ஏற்றுமதி வரி குறைப்பு, பிரிட்டன் பயணிகளுக்கு விசா இல்லாத சீன பயணம் ஆகிய விவகாரங்களும் தலைவா்களின் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், பிரிட்டனில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள சீன நாட்டா்களைத் தாயகம் திருப்பி அனுப்புவதை வேகப்படுத்தவும், சீன போதைப்பொருள் கும்பல்களை ஒடுக்கவும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் புதிய வா்த்தக கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, தென் கொரியா, கனடா, பின்லாந்து போன்ற நாடுகளைத் தொடா்ந்து பிரிட்டனும் சீனாவுடன் நெருக்கமான உறவை வளா்க்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

