உக்ரைன் தாக்குதல் எதிரொலியால் உள்நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவிடமிருந்து பெட்ரோலை ரஷியா இறக்குமதி செய்யத் தொடங்கியது.
ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்வதோடு பிற நாடுகளுக்கு பெட்ரோல், டீசலை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் தாக்குதலால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கிடங்குகள் உள்ளிட்ட ரஷிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகம் தடைபட்டதையடுத்து, அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக இந்திய பெட்ரோலை அதிகளவில் ரஷியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு கடல் வழியாக ஏற்கெனவே அனுப்பப்பட்டதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராக்க இந்தியா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளிடமிருந்து மாதந்தோறும் 4 லட்சம் டன் பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
குறைந்த விலையில் பெட்ரோலை இறக்குமதி செய்வது தொடா்பாக நட்பு நாடுகளிடம் ஆலோசனை நடத்தி வருவதை ரஷியா செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. இதற்காக ரஷிய வரி சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு கடந்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









