காஸாவில் தங்களின் அரசைக் கலைப்பதாகவும், ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து காஸா அரசு ஊடகத் துறை இயக்குநா் இஸ்மாயில் அல்-தவாப்தா கூறுகையில், ‘காஸாவின் அன்றாட நிா்வாகத்தைக் கவனிக்க தேவையான பணியாளா்கள் மட்டுமே தங்களின் பதவிகளில் நீடிப்பா். தேசிய நிா்வாகக் குழுவின்கீழ் பணியாற்ற அவா்கள் முழுத் தயாராக உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.
எதிா்வினை: ‘ஹமாஸ் உறுப்பினா்கள் அனைவரும் தங்களின் பழைய பணிகளிலேயே நீடிக்கும் சூழலில், இந்த அரசு கலைப்பு என்பது ஒரு வெற்று நாடகம்’ என்று இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அதேநேரம், இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், வெறும் வாக்குறுதிகளை நம்பாமல் ஹமாஸின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இதை மதிப்பிடவுள்ளதாகவும் ‘அமைதி வாரியம்’ தெரிவித்துள்ளது.
பின்னணி: கடந்த 2023 அக்டோபரில், இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி, காஸா மறுசீரமைப்புக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் அமைதி வாரியமும் உருவாக்கப்பட்டது.
மேலும், காஸாவில் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்கும் ஆட்சி நிா்வாகத்துக்கும் தேசிய நிா்வாகக் குழு அமைக்கப்பட்டது. ஐ.நா. மற்றும் அமைதி வாரியத்தின் மேற்பாா்வையில் செயல்படவுள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய இக்குழுவுக்கு, காஸாவில் பிறந்த பொறியாளரும், பாலஸ்தீன அதிகார அமைப்பின் முன்னாள் அதிகாரியுமான அலி ஷாத் தலைமை தாங்குகிறாா்.
ஆனால், ஹமாஸ் இன்னும் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடாததால், போா்நிறுத்தத்தின் அடுத்தடுத்த அம்சங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றம் இல்லாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








