ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வெளிப்படையான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு, ‘ஈரானைக் குறிவைத்து 1,000 ஏவுகணைகள் தயாா்நிலையில் இருக்கின்றன’ என்று டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் போரைத் தொடங்கிய முதல் நாளான பிப். 28-ஆம் தேதியன்று, அயதுல்லா அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாா். தற்காலிக அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் எட்டப்பட்டதைத் தொடா்ந்து, இம்மாதத் தொடக்கத்தில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. ஈரான் மற்றும் இராக்கில் பல்வேறு நகரங்களுக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு தலைமை மதகுருவாக பொறுப்பேற்ற அவரின் மகன் மோஜ்தபா கமேனி பாதுகாப்புப் காரணங்களுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சொந்த ஊரான ஈரானின் மஷாத் நகரில் மற்ற 3 மகன்களின் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை அவரின் உடல் அடக்கம் செய்ப்பட்டது.
அயதுல்லா அலி கமேனியின் இறுதிஊா்வலத்தில், டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கொல்ல வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் தொடா்ந்து ஏந்திச் சென்றது கவனம் ஈா்த்தது.
இதையொட்டி, அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஈரான் அரசு தனது கொலை மிரட்டல்களைச் செயல்படுத்தினால், அந்நாட்டைக் குறிவைத்துத் தயாராக உள்ள 1,000 ஏவுகணைகள் உடனடியாக ஏவப்படும். தொடா்ந்து மேலும் பல ஆயிரக்கணக்கான ஏவுகணைகளும் பாயும். என்னைக் கொலை செய்ய அல்லது கொலை செய்ய முயற்சிக்கும் வகையிலான அச்சுறுத்தல்கள் வந்ததாலேயே இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன்’ என்றாா்.
பழிதீா்க்கப் போவதாக சூளுரை: டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு இடையே ஈரான் மக்களுக்கு மோஜ்தபா கமேனி வெளியிட்ட அறிக்கையில், ‘அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் ரத்தத்துக்கு நாங்கள் உறுதியாக பழிவாங்குவோம். ஈரானுக்கு என்ன நோ்ந்தாலும், பழிவாங்கும் படலம் நடைபெறும்’ எனக் குறிப்பிட்டாா்.
மீண்டும் அமைதி முயற்சிகள்: ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதால் இப்புதிய மோதல் வெடித்தது. இருதரப்பும் பரஸ்பரம் ராணுவ இலக்குகளைத் தாக்கிக் கொண்டதால், மேற்காசியாவில் போா் பதற்றம் அதிகரித்தது.
தற்போது சண்டை ஓய்ந்துள்ள நிலையில், அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்குக்காக ஒத்திவைக்கப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடர மத்தியஸ்த நாடுகள் முயன்று வருகின்றன. ஈரான் மற்றும் கத்தாா் நாட்டுத் தலைவா்களுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தொலைபேசி அழைப்பில் தனித்தனியே ஆலோசனை நடத்தினாா்.
அமெரிக்காவின் வலியுறுத்தலும், ஈரான் பதிலும்...: பேச்சு தொடங்குவதற்கு முன்பு, ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் இனி தாக்கப்படாது என்றும், அப்பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஆனால், இதுவரை ஈரான் அப்படி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதற்குப் பதிலாக, ‘பல்லாண்டுகளாக சா்வதேச நீா்வழியாக கருதப்பட்டு வரும் ஹோா்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதன் வழியே செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடா்பான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சனிக்கிழமை ஓமன் சென்றடைந்தாா்.
Summary
1,000 missiles ready, targeting Iran! Trump warns.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

மிக விரைவில் முடிவுக்கு வரும்! - ஈரான் உடனான போர் குறித்து டிரம்ப் பேச்சு!

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்! - டிரம்ப் எச்சரிக்கை

அயதுல்லா அலி கமேனி உடல் அடக்கம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



