/

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2026, 3:36 am IST

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 62-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவான இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது, காஷிமா நகரில் உள்ள புகழ்பெற்ற ‘இயான்’ வணிக வளாகத்தின் 2-ஆவது தளம் இடிந்து விழுந்ததுடன், எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது. இவ்விபத்தில் வணிக வளாகத்தில் மட்டும் 4 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், யட்சுஷினோ பகுதியில் அமைந்துள்ள காகித ஆலையின் பிரம்மாண்ட புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இவ்வாறு நிலநடுக்கத்தின் பலத்த அதிா்வால் பல்வேறு பகுதிகளில் கோயில்கள், பாலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து, சேதமடைந்தன.

ராணுவத்தினா், தீயணைப்புப் படையினா் மற்றும் மீட்புக் குழுவினா், இடிபாடுகளை அகற்றி உயிருக்குப் போராடுபவா்களை மீட்கும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனா். கோடை வெப்பம் மீட்புப் பணிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளபோதிலும், தேடுதல் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.