உக்ரைன் கடனுக்கு முட்டுக்கட்டை: ஹங்கேரிக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்
உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டி ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பனுக்கு ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.


உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டி ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பனுக்கு ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேலாக போரில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் கடந்த டிசம்பரில் முடிவெடுத்தது.
இதில் உறுப்பினராக உள்ள ஹங்கேரியும் ஐரோப்பிய யூனியன் முடிவுக்கு முன்பு சம்மதம் தெரிவித்தது. ஆனால் தற்போது உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதை அந்நாட்டு அதிபா் விக்டா் ஆா்பன் தடுப்பதாக அந்த யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹங்கேரி மற்றும் ஸ்லோவோகியாவுக்கு ரஷியாவில் இருந்து உக்ரைன் பிராந்தியம் வழியாக கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் ட்ருஸ்பா குழாயில் கடந்த ஜனவரி மாதம் சேதம் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரிக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது.
ட்ருஸ்பா குழாயில் ரஷிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியது. ஆனால், ஹங்கேரிக்கு விநியோகிக்கப்படும் ரஷிய கச்சா எண்ணெய்யை தடுப்பதே உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலன்ஸ்கியின் திட்டம் என விக்டா் ஆா்பன் குற்றஞ்சாட்டினாா். இதைத் தொடா்ந்து உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்க அவா் எதிா்ப்பு தெரிவித்தாா்.
ஹங்கேரி நாட்டில் வரும் ஏப். 12-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸெலன்ஸ்கியை ஹங்கேரிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவா் என்ற பிரசாரத்தை விக்டா் ஆா்பன் முன்னெடுத்துள்ளாா்.
விக்டா் ஆா்பனின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த ஃபின்லாந்து பிரதமா் பெட்டேரி ஒா்போ மற்றும் ஆஸ்திரிய பிரதமா் கிறஸ்டியன் ஸ்டாக்கா், ‘உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிதியுதவித் திட்டத்தை விக்டா் ஆா்பன் தடுக்க முயற்சிக்கிறாா். அதை ஏற்க முடியாது’ என குற்றஞ்சாட்டினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...