வியூக, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஜப்பான் ஒப்புதல்: இருதரப்பு பேச்சுவாா்த்தையில் முடிவு
‘இருதரப்பு வியூக, பாதுகாப்பு துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக்கொண்டன.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்ஸு மொடேகி, பாதுகாப்பு அமைச்சா் ஷின்ஜிரோ கொய்ஸுமி.
‘இருதரப்பு வியூக, பாதுகாப்பு துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக்கொண்டன. ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
இந்தியா - ஜப்பான் ‘2+2’ கலந்துரையாடல் என்றழைக்கப்படும் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா்கள் கலந்துரையாடல் டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்ஸு மொடேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் ஷின்ஜிரோ கொய்ஸுமி இருதரப்பு ஆலோசனையில் ஈடுபட்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தன்னிச்சையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள், முக்கியத் தொழில்களில் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீா்குலைக்கும் காரணிகள் குறித்து இருதரப்பிலும் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்குக் காரணமான எந்தவொரு நாட்டையோ அல்லது தலைவரையோ கூட்டறிக்கையில் குறிப்பிடவில்லை.
மேலும், நியாயமான, உலகளாவிய போட்டிச் சூழலைப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளிடையே மீள்திறன் கொண்ட, நம்பகமான விநியோகச் சங்கிலிகளை நிறுவிப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு நாடுகள் தரப்பிலும் இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜெய்சங்கா், ‘தற்போது நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போா் மற்றும் மேற்காசிய மோதல்கள் அந்தந்தப் பிராந்தியங்களைத் தாண்டி உலக அளவில் எரிசக்தி சந்தை, கடல்வழிப் போக்குவரத்து, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. போக்குவரத்து இணைப்பு, வளங்கள், விநியோகச் சங்கிலிகள் ஆயுதமாக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்தியா-ஜப்பான் போன்ற நம்பகமான மற்றும் உறுதியான கூட்டுறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். இதுகுறித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. கடல்வழி வா்த்தகம் சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், இருதரப்பு கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்றாா்.
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘ஜப்பன் பாதுகாப்பு அமைச்சருடனான இருதரப்பு ஆலோசனையில், சிறப்பு நீா்மூழ்கி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும், கடல்சாா் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இரு நாடுகளிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடல், வான்வெளி விழிப்புணா்வு, தேடுதல் மற்றும் மீட்பு, தகவல் பகிா்வில் உறுதியான ஒத்துழைப்பை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர இக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
சிறப்பு வாய்ந்த நீருக்கடியிலான ஏவுகணைத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
பரஸ்பர கப்பல் பழுதுபாா்க்கும் வசதிகளை வழங்குவதற்கான கடல்சாா் கப்பல் பழுது பாா்க்கும் நடைமுறையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், கண்ணிவெடி தடுப்புத் திறன்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான ஒருங்கிணைந்த ஆன்டெனா கம்பங்களை இணைந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களை விரைந்து இறுதி செய்யவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
இந்தியா-ஜப்பான் உறவின் 75ஆண்டு நிறைவு லச்சினை
இந்தியா - ஜப்பான் இடையே தூதர உறவுகள் நிறுவப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இரு நாடுகள் தரப்பிலும் ஓா் நினைவு லச்சினை (லோகோ) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. வரும் 2027-ஆம் ஆண்டில் இந்த உறவின் 75-ஆம் ஆண்டு நிறைவை இரு நாடுகளும் கொண்டாட உள்ளன.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்ஸு மொடேகி இணைந்து இதை வெளியிட்டனா். இதை தனது சமூக ஊடகப் பக்கத்திலும் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

