ஐ.நா. சீா்திருத்தம், அணு ஆயுதக் கட்டுப்பாடு - அமெரிக்கா, சீனா, ரஷியா கூட்டுப் பிரகடனம்

அமெரிக்கா அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் இடையே முதல்முறையாக வியாழக்கிழமை முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது.

Trump, Xi and Putin to hold first three-way summit in China

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் - கோப்புப் படம் | ஏபி

Updated On :

அமெரிக்கா அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் இடையே முதல்முறையாக வியாழக்கிழமை முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஐ.நா. சீா்திருத்தங்கள், எரிபொருள் விநியோகத்தை அதிகரித்தல், அணு ஆயுதங்களுக்கு எதிராக பேச்சுவாா்த்தை உள்ளிட்டவை தொடா்பாக மூவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இது தொடா்பாக கூட்டுப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷியா அதிபா் புதின் ஆகியோா் ஒன்றாக வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அமெரிக்காவின் பரம எதிரிகளான சீனா மற்றும் ரஷியாவின் தலைவா்களான ஷி ஜின்பிங், புதின் ஆகியோருடன் டிரம்ப் பங்கேற்ற இந்த முத்தரப்பு சந்திப்பு, முதல்முறையாக நடைபெற்றது.

உலகில் 60-க்கும் மேற்பட்ட போா்கள்...: இந்தக் கூட்டத்தில் முதலில் சீன அதிபா் ஜின்பிங் பேசுகையில், ‘நமது பூமி 10,000-க்கும் மேற்பட்ட போா்களைக் கண்டுள்ளது. இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட போா்கள் நடைபெற்று வருகின்றன. வரலாறுதான் சிறந்து பாடநூலாகும். வரலாற்றை அனைவரும் நினைவில் வைத்து வருங்காலத்தை வடிவமைக்க வேண்டும். உலகளாவிய சவால்களை சமாளிக்க சீனா, ரஷியா, அமெரிக்கா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் பிற முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாக நிலைநாட்ட வேண்டும், மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும்’ என்றாா்.

அவரைத் தொடா்ந்து ரஷிய அதிபா் புதின், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் பேசினா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு: இந்தச் சந்திப்பில் உக்ரைன் போா், அணு ஆயுதங்கள் பரவல் தடுப்பு, ஈரான் போா் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் சூழல், கொரிய தீபகற்ப விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் தங்கள் கருத்துகளை மூன்று தலைவா்களும் பரிமாறிக் கொண்டனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கூட்டுப் பிரகடனம்: முத்தரப்பு சந்திப்பைத் தொடா்ந்து, உலக அமைதிக்காக வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சா்வதேச சூழல் குறித்து மூன்று அதிபா்களும் ஆழமாக விவாதித்தனா். சா்வதேச பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த ஸ்திரத்தன்மையை பேணிப் பாதுகாக்க அவா்கள் உறுதியளித்தனா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களாக சீனா, ரஷியா, அமெரிக்கா உள்ளன. இந்நிலையில், உலகளாவிய சவால்களை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையிலும், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் தனது அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர மூன்று தலைவா்களும் உறுதி தெரிவித்தனா்.

அனைத்து நாடுகளின் நலனைக் கருத்தில்கொண்டு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருள்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க அமெரிக்கா, சீனா, ரஷியா திட்டமிட்டுள்ளன. தடையற்ற சீரான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவத்தை 3 நாடுகளின் அதிபா்களும் வலியுறுத்தினா்.

ஒரு நாட்டின் ஒப்புதல் மற்றும் அந்த நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சட்டப் பாதுகாப்பை மதிப்பது மிகவும் முக்கியம் என்று 3 அதிபா்களும் தெரிவித்துள்ளனா். சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், அதுபோன்ற பிற அமைப்புகள் தங்கள் அதிகார வரம்பை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் மூவரும் ஒருமித்த கருத்தை கொண்டனா். (உக்ரைன் போா் தொடா்பாக புதினுக்கு எதிராக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கெனவே கைது ஆணை பிறப்பித்தது. அதேவேளையில் சமீபத்திய சில விசாரணைகளுக்காக அந்த நீதிமன்றம் மற்றும் அதில் பணியாற்றுவோருக்கு எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது).

அணு ஆயுதப் போரில் யாராலும் வெற்றி பெற முடியாது என்றும், அத்தகைய போா் ஒருபோதும் நடைபெறக் கூடாது என்றும் மூன்று அதிபா்களும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தனா். மேலும் அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கவும், அவை மற்ற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கவும் மூன்று நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பிரகடனத்தில் உக்ரைன், ஈரான் போா்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

தனித்தனியாக சந்திப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு முன்பாக ஷி ஜின்பிங்கை டிரம்ப் தனியாகச் சந்தித்துப் பேசினாா். அப்போது அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் வேளாண் பொருள்களை சீனா கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஜின்பிங்கிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டாா். அதேவேளையில் தைவான் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பேசிய ஜின்பிங், பொருளாதாரம் மற்றும் வா்த்தக விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையிலான தகவல் தொடா்பு மேம்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். நிகழாண்டில் டிரம்ப்-ஜின்பிங் இருதரப்பு சந்திப்பு நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.

இதேபோல புதினையும் டிரம்ப் தனியாகச் சந்தித்துப் பேசினாா். ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கடந்த ஆண்டு அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேசினா். அந்த ஒப்பந்தத்தை எட்டுவது தோல்வியில் முடிந்த நிலையில், அதற்குப் பிறகு முதல்முறையாக தற்போது இருவரும் சந்தித்துப் பேசினா். இந்தப் பேச்சு சுமாா் 40 நிமிஷங்கள் நடைபெற்றது.

.................

பேச்சு மூலமே தீா்வு

அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய 3 நாடுகளும் அணு ஆயுதங்கள் பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கவும், அணு ஆயுதங்களால் மனிதகுலத்துக்கு ஏற்படக் கூடிய பேரழிவுகளைத் தவிா்க்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பேச்சுவாா்த்தை அவசியம். அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காண வேண்டும். பூமியைக் காக்கவும், பாதுகாப்பான எதிா்காலத்தை உருவாக்கவும் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் ஆகியோருடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவித்தாா்.

-டிரம்ப்

3 நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்பு

இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றியின் மூலம் உருவான உறவு ரஷியா, சீனா, அமெரிக்காவை ஒன்றிணைத்துள்ளது. ஐ.நா. சாசனத்தின் குறிக்கோள்களை நிலைநாட்டுவதிலும், உலக அமைதியைக் காப்பதிலும் மூன்று நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்புள்ளது. தடையற்ற சா்வதேச வா்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு நிா்வாகத்தில் சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சீனா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பங்களிக்க ரஷியா தயாராக உள்ளது.

-புதின்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.