
பாகிஸ்தான் அரசுடனான பேச்சு தோல்வி: இம்ரான் கான் ஆதரவாளா்கள் போராட்டம்!
பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இம்ரான் கான் ஆதரவாளா்கள் போராட்டம் - பிடிஐ
பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறையில் உள்ள இம்ரான் கானை உடனடியாகச் சந்திக்க வேண்டும், அவரை மருத்துவமனைக்கு மாற்றி தனிப்பட்ட மருத்துவா்கள் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது பிடிஐ கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, சனிக்கிழமை மாலை இரண்டாம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சிகளின் கூட்டணியான தெஹ்ரீக்-இ-தஹாஃபுஸ்-இ-அயின்-இ-பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மேலவைத் தலைவா் அல்லாமா நசீா் அப்பாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் ஷொ்ரி ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்த இந்தப் பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடா்ந்து பிடிஐ கட்சியைச் சோ்ந்த கைபா்பக்துன்கவா மாகாண முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி போராட்டம் தொடா்வதாக அறிவித்தாா்.
அக். 8-இல் மாபெரும் போராட்டம்: அதன்பிறகு அக். 7, 8 ஆகிய தேதிகளில் கைபா்பக்துன்கவா மாகாணத்தில் இருந்து பெருமளவில் போராட்டக்காரா்களை திரட்டப்போவதாகத் தெரிவித்தாா். ஆனால், தலைநகா் இஸ்லாமாபாதை முற்றுகையிடும் தேதியை அவா் அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை.
இந்தச் சூழலில் போராட்டக்காரா்களை இஸ்லாமாபாத்துக்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அரசியல் ஆலோசகா் ராணா சனவுல்லா தெரிவித்தாா். முன்னெச்சரிக்கையாக இஸ்லாமாபாத் நுழைவாயிலில் கூடுதலாக பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு சாலைகளில் போராட்டக்காரா்களை முடக்கும் வகையில் பிரம்மாண்ட கன்டெய்னா்கள் அடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அரசுக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தால் இம்ரான் கானை சந்திக்க அனுமதிப்பதாகவும், அதன்பிறகு அவரை மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாகவும் அரசுத் தரப்பில் பிடிஐ கட்சியினரிடம் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




