
சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க டிரம்ப் விருப்பம்: அமெரிக்கத் தூதர் தகவல்
சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக வெளியான தகவல் குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் - AP
வாஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபா் ஷி ஜின்பிங், தனது அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை இந்த ஆண்டில் மேலும் இரண்டு முறை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது அவரிடம் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு விருப்பமா? என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டியூ ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
தைவானுக்கு அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் ஆயுத விற்பனையை நியாயப்படுத்தும் வகையில், இது உலகம் முழுவதும் அமெரிக்கா மேற்கொள்ளும் பல விற்பனைகளில் ஒன்றுதான் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் கூறினார். அத்துடன், நீங்கள் அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா? என்றும் அவர் கேட்டதாக டேவிட் பெர்டியூ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுக்கே ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த சாத்தியக்கூறை டிரம்ப் முன்வைத்ததாக டேவிட் பெர்டியூ கூறினார்.
இத்தகைய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், சீனா மற்றும் தைவான் விவகாரத்தில் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் அமெரிக்கக் கொள்கை தலைகீழாக மாறும்; மேலும், அமெரிக்கத் தொழில்நுட்பம் ஒரு சாத்தியமான எதிரியின் கைக்குச் செல்லும் அபாயமும் ஏற்படலாம். இந்த முன்மொழிவு எப்போது செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடவில்லை.
தைவான் விவகாரத்தில் டிரம்ப் மிக உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், நான் பார்த்ததிலேயே அவர்தான் இதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்றும், தைவானுக்கு ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார். தைவானுக்கான எதிர்கால அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை குறித்தும் டிரம்ப் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
தைவான் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு அமெரிக்க தனது சொந்தச் சட்டங்களின்படி கடமைப்பட்டுள்ளது. தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்காவிட்டாலும், அந்த தீவின் மிக வலுவான அதிகாரப்பூர்வ ஆதரவாளராகவும் ஆயுதங்களை வழங்குபவராகவும் அமெரிக்கா திகழ்கிறது. இருப்பினும், சீனா ஆக்கிரமிப்பு நடத்தினால், தனது நட்பு நாடான தைவானைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்துமா என்பது குறித்து அமெரிக்கத் தலைவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது இருநாட்டு அதிபர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா சாதனை அளவான 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பு விற்பனையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், தைவானுக்கான ஆயுத விற்பனையை சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு "மிகச் சிறந்த துருப்புச் சீட்டு" என்று டிரம்ப் கூறினார்.
கடந்த வாரம் வெள்ளை மாளிகைகளில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் தனிப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, தைவானின் சுதந்திரத்தை எதிர்க்குமாறு டிரம்பிடம் ஜின்பிங் வலியுறுத்தியதாக சீன ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் மூலம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கச் சட்டம் சீனாவுக்கு ஆயுதங்கள் விற்பதைத் தடை செய்கிறது. மேலும், சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் எந்தவொரு விருப்பமோ திட்டமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் இது குறித்து உடனடியாக எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



