ஆரம்ப பள்ளிக் கல்வியை அவரவர் தாய்மொழியில் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.
பெங்களூரு கண்டீருவா விளையாட்டுத் திடலில் புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்த 62-ஆவது கர்நாடக உதய தின விழாவைத் தொடக்கிவைத்து, தேசிய மற்றும் மாநிலக் கொடிகளை ஏற்றிவைத்து சித்தராமையா பேசியது:
ஆரம்பப் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கன்னட மொழிக்கு மட்டும் ஆபத்தானது என்று யாரும் நினைக்கக் கூடாது. மாறாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அனைத்து மாநில மொழிகளின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை. அவரவர் தாய்மொழிகளில் ஆரம்பப் பள்ளிக் கல்வி வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில் அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால்தான் மாநில மொழிகளைப் பாதுகாக்க இயலும். இதைச் செய்ய தவறினால் மாநில மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆரம்பப் பள்ளிக் கல்வியை அந்தந்த மாநிலஅல்லது தாய்மொழிகளில் வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
இதை செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் கன்னட மொழியே ஆட்சி மொழியாகும். கன்னட மாநிலம், மொழியை அவமதிக்கும் நிகழ்வை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது.
கன்னடம் அல்லாத மொழியினர் அனைவரும் கன்னடம் கற்றுக் கொள்ளும் சூழல் உருவாக்க அனைவரும் பங்காற்ற வேண்டும். கர்நாடகத்தில் வாழும் அனைவரும் கன்னடர்கள்தான். எனவே, அனைவரும் கட்டாயமாக கன்னடம் கற்க வேண்டும். பிற மொழியினருக்கு அன்பான முறையில் கன்னட மொழியைக் கற்பிக்கு வேலையை செய்ய கன்னடர்கள் முன்வர வேண்டும்.
கன்னடர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். அதற்காக கன்னடம் கற்காமல் இருந்தால் அதை சகித்துக் கொள்ள இயலாது. வீடு, வீதி, அலுவலகம், தொழிலகங்களில் கன்னட மொழியிலேயே அனைவரின் கலந்துரையாடலும் இருக்க வேண்டும்.
ஒருசில தனியார் பள்ளிக் கூடங்களில் கன்னடமொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னட மொழியைப் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.
கர்நாடகத்தில் ஆங்கிலம் உள்பட எந்தவொரு மொழியையும் கற்கத் தடையேதுமில்லை. ஆனால், கன்னடமொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். கன்னட மொழியை அலட்சியப்படுத்தினால் அதை சகித்துக் கொள்ளமாட்டோம். கன்னடப் பயிற்று மொழிப் பள்ளியில் படித்தால் அறிவாளி ஆவதில்லை என்ற கற்பிதங்களை தூக்கியெறிய வேண்டும். கன்னட மொழியில் பயின்றால் இயல்பான அறிவு வளர்ச்சி சாத்தியமாகும். எனவே, கன்னடப் பயிற்றுமொழிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அரசு நடத்தும் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னடப் பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் படித்து வந்தாலும் அப்படிப்பட்ட பள்ளிகளை மூடப்போவதில்லை. கர்நாடகத்தில் செயல்படும் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துவகையான பள்ளிகளிலும் கட்டாயமாக கன்னட மொழியை கற்பிக்க வேண்டும்.
கன்னட மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலம், கடந்த 61 ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. கன்னட மொழியும் மேம்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் கன்னடமயமாகும் சூழலை உருவாக்க இயலவில்லை. கர்நாடகத்தின் மொழியாம் கன்னடத்திற்கு உரிய கெளரவத்தை வழங்குவதோடு, அதை அனைவரும் கற்றுத்தேற வேண்டும். அதேபோல, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தை மொழிப் பாடமாக கற்றுத்தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்கிலப் பள்ளிகளிலும் கன்னடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் அமைச்சர்கள் தன்வீர்சேட், ரோஷன்பேக், கே.ஜே.ஜார்ஜ், கல்வித்துறை உயரதிகாரிகள் ரஜ்னிஷ்கோயல்,ஷாலினிரஜ்னிஷ், பி.சி.ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.