காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை விட்டால் வேறு ஆளில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை விட்டால் வேறு ஆளில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மாநில ஊடக பயிற்சிப்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை விட்டால் வேறு ஆளில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மாநில ஊடக பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து, அவர் பேசியது:
நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக முடியும். அதனால்தான் ராகுல்காந்தி தலைவராகியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. அதனால் தொடர் தோல்விகளை தந்துள்ள ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்கி அழகு பார்க்கிறார்கள். ஆனால் பாஜகவில் அப்படியில்லை. தேநீர் விற்றவர் நாட்டின் பிரதமராகவும், விவசாயியின் மகன் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் முடிகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஆளுமைக்குட்பட்டது வெறும் கர்நாடகமும், ஒரு சில வட கிழக்கு மாநிலங்கள் மட்டுமே. அதனால், கர்நாடகத்தை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
அதேபோல, இந்த மாநிலத்தை எளிதில் வென்றுவிட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துள்ளது. எப்பாடுபட்டாவது மாநிலத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வருவோம். அதன்மூலம் காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவோம். கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராவது உறுதி என்றார் அவர்.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் பேசியது:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போர் தொடங்கி விட்டது. பாஜகவினர் விழிப்புடன் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் கவனத்துடன் செயல்பட்டு, பாஜகவை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவரத் துடிப்பாக உழைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது. அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்கள் சந்தீப் பாத்ரா, நரசிம்ம ராவ், மாநில செய்தி தொடர்பாளர் வாமனாச்சார்யா, நடிகை மாளவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com