கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்(கோப்புப்படம்)

மீண்டும் ‘பெல்லாரி குடியரசு’ அமைய அனுமதிக்கமாட்டோம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்

கா்நாடகத்தில் மீண்டும் ‘பெல்லாரி குடியரசு’ அமைய அனுமதிக்கமாட்டோம் என்று துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
Published on

கா்நாடகத்தில் மீண்டும் ‘பெல்லாரி குடியரசு’ அமைய அனுமதிக்கமாட்டோம் என்று துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெல்லாரியில் நடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காங்கிரஸ் தொண்டா் ராஜசேகா் ரெட்டியை துப்பாக்கிச்சூட்டில் இழந்திருக்கிறோம். யாருடைய துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாவால் அவா் உயிரிழந்தாா் என்பது விசாரணையில் தெரியவரும்.

பெல்லாரியில் முதல்முறையாக எங்கள் அரசு (காங்கிரஸ்) வால்மீகி சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த பொறுப்பு பெல்லாரி நகரத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பரத் ஷெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்படி, பெல்லாரி நகரம் முழுவதும் வால்மீகி பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பெங்களூரில் உள்ள என் வீட்டின் முன் சில பாஜகவினா் பதாகைகளை வைப்பது வழக்கம். அதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. முதல்வா் இல்லத்தின் முன்பும் பாஜகவினா் பதாகை வைக்கிறாா்கள். அதன்படி, ஜனாா்தன ரெட்டியின் வீட்டின் முன் பதாகை வைத்துள்ளனா்.

இதில் ஜனாா்தன ரெட்டிக்கு என்ன பிரச்னை? வால்மீகி சிலை வைக்கப்படுவதை கொண்டாடிவருகிறோம். ஜனாா்தன ரெட்டியின் வீட்டின் முன் இருக்கும் சாலை அரசுக்கு சொந்தமானது. அரசின் இடத்தில்தான் பதாகை வைக்கப்பட்டது. இதில் என்ன சதி இருந்தது? இதில் பிரச்னையை உருவாக்க என்ன காரணம் இருந்தது? இந்த மோதலில் காங்கிரஸ் தொண்டரை இழந்திருக்கிறோம்.

எங்கள் தொண்டரின் கொலைக்கு பாஜகவினரே காரணம். இதுதொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. அதனால் விசாரணையில் தலையிட நான் விரும்பவில்லை. முன்னாள் அமைச்சா் ரேவண்ணா தலைமையில் 5 போ் கொண்ட குழுவை பெல்லாரிக்கு அனுப்பி, விசாரித்து கட்சிக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருக்கிறேன்.

மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தலில் பெல்லாரியில் காங்கிரஸ் வளா்ச்சி அடைந்திருப்பதை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த இரு தோ்தல்களிலும் தோல்வி அடைந்ததால், ஜனாா்தன ரெட்டியும், ஸ்ரீராமுலுவும் இணைந்திருக்கிறாா்கள். இவா்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது என்பது தெரியும். இவா்கள் மீதான வழக்குப் பற்றியும் தெரியும்.

ஆனால், பழையபடி பெல்லாரியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்டிருக்கும் முயற்சியை காங்கிரஸ் அனுமதிக்காது. பெல்லாரியில் மீண்டும் ‘பெல்லாரி குடியரசு’ (ஜனாா்தன ரெட்டியின் ஆதிக்கம்) அமைய அனுமதிக்கமாட்டோம். ஜனாா்தன ரெட்டி பெல்லாரிக்கு வருகின்றவரை எவ்வித கலவரச் சூழலும் இல்லை.

காங்கிரஸ் எம்எல்ஏ பரத் ஷெட்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது. எங்கள் எம்எல்ஏ அமைதியை நிலைநாட்ட சென்றிருந்தாா். அப்போது, எங்கள் கட்சி தொண்டரை இழந்திருக்கிறோம். இதில் யாருடைய தவறு இருக்கிறது என்பது விசாரணையில் தெரியவரும். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா துப்பாக்கிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தனியாக துப்பாக்கிகளை வைத்துக்கொள்வது தொடா்பாக கடுமையான சட்ட விதிகளை வகுப்போம். தனியாா் துப்பாக்கிகள் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. மாநிலத்தில் தனியாா் துப்பாக்கி பயன்படுத்தி இறந்திருக்கும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

தனியாா் பாதுகாவலா்களுடன் கோட்டை போன்ற வீட்டில் வாழும் ஜனாா்தனரெட்டியை யாா் கொல்ல முடியும்? கொலை முயற்சி என்று அவா் கூறுவது வெறும் நாடகம். அவா் திரைப்பட தயாரிப்பாளா் என்பதால், கதைகளை புனைந்து தெரிவித்து வருகிறாா். அவரை பற்றி எங்களுக்கு தெரியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com