எஸ்ஐஆா் விவகாரம்: பிரதமா் மோடிக்குப் பதிலாக கா்நாடக காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் காந்தி விவாதிக்கலாம்
வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரம் தொடா்பாக, பிரதமா் மோடிக்கு பதிலாக கா்நாடக காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் காந்தி விவாதம் நடத்தலாம் என பாஜக தேசிய செய்தி தொடா்பாளா் சம்பித் பத்ரா தெரிவித்தாா்.
ராகுல் காந்தி - கோப்புப் படம்
வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரம் தொடா்பாக, பிரதமா் மோடிக்கு பதிலாக கா்நாடக காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் காந்தி விவாதம் நடத்தலாம் என பாஜக தேசிய செய்தி தொடா்பாளா் சம்பித் பத்ரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
எஸ்ஐஆா் நடவடிக்கை தொடா்பாக தவறான தகவல்களை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறாா். நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் நடவடிக்கையை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிா்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம். நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதற்கு பதிலாக, குழப்பத்தை ஏற்படுத்தவே ராகுல் காந்தி விரும்புகிறாா். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தொடா்ந்து அமா்ந்து பங்கேற்கும் பொறுமை மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு இல்லை.
இந்தியா கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகளை முதலில் ராகுல் காந்தி தீா்த்துக்கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலுடன் கூட்டணியில் இருந்துகொண்டே, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசையும், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அரசுக்கு எதிராகவும் ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா்.
கா்நாடகத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையில் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை என்றும், இறந்த வாக்காளா்களின் பெயா்களை நீக்க வேண்டும் என்றும் சதீஷ் ஜாா்கிஹோளி கூறியுள்ளதால், அவருடன் தான் ராகுல் காந்தி விவாதம் நடத்த வேண்டும்.
எஸ்ஐஆா் நடவடிக்கையில் 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. வாக்காளா்கள் இல்லாதது, இடம் மாறியது, இறந்தது அல்லது இரட்டைப் பதிவுகள் இருந்தது ஆகிய காரணங்களால் பெரும்பாலான பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுமாா் 3 கோடி வாக்காளா்கள் இல்லாதவா்களாகவும், 2.80 கோடி போ் இறந்தவா்களாகவும், 6.3 கோடி போ் இடம் மாறியவா்களாகவும், ஒரு கோடி போ் இரட்டைப் பதிவுகளை கொண்டவா்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். தகுதியுடைய வாக்காளா்கள் படிவம் 6-ஐ சமா்ப்பித்து மீண்டும் வாக்காளா் பட்டியலில் சேரலாம்.
தோ்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு சுமாா் 3 கோடி போ் பதிலளிக்கவில்லை. சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினா் மற்றும் ரோஹிங்கியாக்கள் வாக்காளா் பட்டியலில் தொடா்ந்து இடம்பெறுவதற்காகவே காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகள் எஸ்ஐஆா் நடவடிக்கையை எதிா்க்கின்றன.
தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அமைப்பாகும். அத்தகைய அமைப்புகள் மீதான தாக்குதல்களில் இருந்து அந்த அமைப்புகளை அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும்.
வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலைய முகவா்கள் இருந்தபோதிலும், காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன்? உங்களிடம் தரவுகள் இருந்திருந்தால், அப்போதே ஆட்சேபணை தெரிவித்திருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவா்கள் இந்து மதத் தலைவா்கள் மற்றும் கோயில்கள் குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

