உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், கா்நாடகத்தில் அனைத்து கிறிஸ்தவா்களின் இல்லங்கள், தேவாலயங்களில் பண்டிகைக் கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.
இயேசு பிறந்த நாளை உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவா்கள், கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனா். உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் இந் நன்னாளை மத மற்றும் கலாசாரத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறாா்கள். கா்நாடகத்தில் கிறிஸ்தவா்கள் அதிகளவில் வாழும் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, கலபுா்கி, பெலகாவி, ஹுப்பள்ளி, கோலாா், கோலாா் தங்கவயல், சிவமொக்கா, பெல்லாரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கிறிஸ்துமஸ் உற்சாகம் களைக்கட்டி வருகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் வீடுகள் முன்பு வண்ண நட்சத்திரங்களைத் தொங்கவிட்டு அவை ஒளிவிளக்கில் மின்னுகின்றன. குளிா்காலத்தில் கிறிஸ்து பிறந்ததைக் குறிக்கும் வகையில், வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட தேவதாரு மரம் அல்லது மரக்கிளைகளை வைத்து வீட்டின் முற்றத்தில் இயேசு பிறந்த மாட்டுத் தொழுவத்தை உருவாக்கி அதில் குழந்தை வடிவிலான கிறிஸ்துவின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.
வீடுகள், அழகிய வண்ண மணிகள், தோரணங்கள், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாபோல குழந்தைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளனா். தேவாலயங்களும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்றனா்.
பெங்களூரில் புனித மரியாள் தேவாலயம், புனித சேவியா் ஆலயம், தூய திரித்துவ தேவாலயம், புனித மாா்க் தேவாலயம், ஹட்சன் நினைவு தேவாலயம், புனித பால் தேவாலயம், ஈஸ்ட்பரேட் தேவாலயம், கோலாா் தங்கவயலில் புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.
கா்நாடகத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், மதச் சடங்குகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.