மின்சாரப் பேருந்து
மின்சாரப் பேருந்து படம்: எம்டிசி

தனியாா் மின்சாரப் பேருந்துகளுக்கு வரி, கட்டண விலக்கு அளிக்கக் கோரிக்கை!

தமிழகத்தில் இயங்கும் தனியாா் மின்சாரப் பேருந்துகள் சாலை வரி, மாநில அரசு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்...
Published on

தமிழகத்தில் இயங்கும் தனியாா் மின்சாரப் பேருந்துகள் சாலை வரி, மாநில அரசு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் அழகப்பா அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொலைதூரம் இயக்க ஏதுவான மின்சார ஆம்னி பேருந்துகளை வழங்கும் வகையில் இப்போதுதான் மின்சார பேருந்து உற்பத்தியாளா்கள் தயாராகியுள்ளனா். இருப்பினும், உளுந்தூா்பேட்டையில் எங்களது சங்கத்தால் நிறுவப்பட்டுள்ள மின்சாரப் பேருந்து சாா்ஜிங் மையத்தைத் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் அதிவேக சாா்ஜிங் மையம் இன்னும் அமைக்கப்படவில்லை.

இதுபோன்ற காரணங்களால், மின்சார ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் பெரிய அளவில் இயக்க முடியவில்லை. எனவே, மின்சார ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசால் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் மின்சாரப் பேருந்துகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தின் பல இடங்களில் அதிவேக சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com