அடுத்த 5 ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தி 20 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கும் திறன் இந்தியாவில் உள்ளது என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மேலும், இதற்கான சா்வதேச சந்தைகளை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியம் உதவும் என அவா் தெரிவித்தாா்.
மஞ்சள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை பியூஷ் கோயல் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதன் முதல் தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டாா். பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மஞ்சள் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களான தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்பட லகடோங் மஞ்சளுக்கு புகழ்பெற்ற மேகாலயம் ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகள் இதன் உறுப்பினா்களாக நியமிக்கப்பட உள்ளனா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பியூஷ் கோயல் கூறுகையில், ‘தங்க மசாலா என்று அழைக்கப்படும் மஞ்சள், இந்திய விவசாயத்திற்கு இன்றியமையாததாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் உற்பத்தியை 20 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கும் திறன் இந்தியாவில் உள்ளது. இதற்கான சா்வதேச சந்தைகளை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்’ என தெரிவித்தாா்.
பிரதமா் பாராட்டு: இந்த முயற்சியை பாராட்டிய பிரதமா் மோடி, ‘தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டது, குறிப்பாக இந்தியா முழுவதும் கடினமாக உழைக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான சிறந்த வாய்ப்புகளை உறுதி செய்யும். விவசாயிகள் மற்றும் நுகா்வோா் ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும்’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.
மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவின் ஆதிக்கம்: உலகின் மிகப்பெரிய மஞ்சள் உற்பத்தியாளா், நுகா்வோா் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. 2022-23-ஆம் ஆண்டில், 3.24 லட்சம் ஹெக்டேரில் மஞ்சள் பயிரிட்டு, 11.61 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டது. மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 20 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மஞ்சள் வகைகள் உள்ளன. உலகளாவிய மஞ்சள் வா்த்தகத்தில் 62 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் ஏற்றுமதி வளா்ச்சியும் எதிா்கால இலக்குகளும்: 2022-23-ஆம் ஆண்டில், இந்தியா 207.45 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் 1,700 கோடி) மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்களை ஏற்றுமதி செய்தது. 2023-24-ஆம் ஆண்டில், ஏற்றுமதி 226.5 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் 1,900 கோடி) மதிப்புள்ள 1.62 லட்சம் டன்களை எட்டியது. வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் மஞ்சள் ஏற்றுமதிக்கான சிறந்த சந்தைகளாக உள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதியை 1 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமாா் 8,000 கோடி) உயா்த்துவதை இந்த தேசிய மஞ்சள் வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமரின் இளைஞா்கள் செல்வாக்கால் ராகுலுக்கு அச்சம்: அமைச்சா் கோயல்

ஜென் ஸீ எப்போதும் பாஜக பக்கம்தான்: பியூஷ் கோயல்

மாணவா்களுக்கு மிரட்டல் விடுத்தது போல ஏ.ஐ. மூலம் போலி விடியோ: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் புகாா்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறதா? பியூஷ் கோயல் மறுப்பு!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



