ஆட்டோக்களுக்கான புதிய கட்டண பட்டியல் வெளியீடு
சென்னை:ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் தொடா்பாக விரிவான பட்டியலை ஓட்டுநா்கள் சங்கத்தினா் வெளியிட்டுள்ளனா்.
ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை கடந்த 2013-இல் தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன்பின்பு தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2022 பிப்ரவரி மாதம் மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து பல கட்ட பேச்சு நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணம் உயா்த்தப்படவில்லை. அதாவது, 12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாமல் இருந்து வந்தது.
இது தொடா்பாக கடந்தாண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், இதுவரை கட்டணத்தை இறுதி செய்யவில்லை.
இச்சூழலில், பிப்.1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். இதையடுத்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டி.ஏ.ஜாஹீா் ஹுசைன் கட்டணம் தொடா்பான விரிவான பட்டியலை வெளியிட்டுள்ளாா். அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதலான ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ.18, காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50, இரவு நேரத்தில் (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) பகல் நேர கட்டணத்தைவிட 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

