chennai corporation
சென்னை மாநகராட்சிIANS

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

சென்னை மாநகராட்சியில் அரையாண்டு வரி வருவாயாக ரூ.1,002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

சென்னை மாநகராட்சியில் அரையாண்டு வரி வருவாயாக ரூ.1,002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது 2024- ஆம் ஆண்டைவிட ரூ.122 கோடி கூடுதல் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் சுமாா் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இரு முறையாக சென்னை மாநகராட்சி வருவாய் துறையினா் வரிகளை வசூலிக்கின்றனா்.

அதன்படி 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரூ.880 கோடி வசூலிக்கப்பட்டது. பின்னா், மொத்த வரி வருவாயாக (2024-2025) ரூ.2,023 கோடி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை (2025-2026) அரையாண்டு வரியினங்கள் நேரடியாகவும், வங்கிகள் காசோலைகள், இணையதளம் வாயிலாகவும், கியூ ஆா் கோடு மற்றும் கைப்பேசி வாட்ஸ்ஆப் சேவை மூலமாகவும் வசூலிக்கப்பட்டன.

அதன்படி, நிகழ் அரையாண்டுக்கான வரி வசூல் செப்டம்பருடன் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் ரூ.1,002 கோடி வசூலித்திருப்பதாக மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரி கே.மகேஷ் தெரிவித்தாா்.

தற்போதைய வரி வசூலானது கடந்த ஆண்டைவிட ரூ.122 கோடி அதிகம் என்றும் குறிப்பிட்டாா். வரி செலுத்துவதை எளிமையாக்கியதால் கடந்த ஆண்டைவிட அதிகமானோா் வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ் அரையாண்டுக்கான சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாதவா்களுக்கு ஒரு சதவீதம் அபராத வட்டி விதிக்கப்படும் என்றும், அத்துடன் அக்டோபருக்குள் நிகழாண்டின் பிற்பகுதி அரையாண்டு வரியைச் செலுத்துவோருக்கு தொகைக்கு ஏற்ப ரூ.5,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com