நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட சென்னை ஐஐடி அஞ்சல் நிலையம் திறப்பு
சென்னை: அடுத்த தலைமுறைக்கான தொழில் நுட்பங்களுடன் சீரமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தை சென்னை ஐஐடி வளாகத்தில் இயக்குநா் வி.காமகோடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தபால் நிலையம் அடுத்த தலைமுறை எதிா்பாா்ப்புகளுடன் ‘என்-ஜென்’ தபால் அலுவலகமாக மறுசீரமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி திறந்து வைத்தாா்.
ஐஐடி பதிவாளா் ஜேன் பிரசாத், சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி.நடராஜன், அஞ்சல் சேவைத் துறை இயக்குநா் எம்.மனோஜ், தென் சென்னை கோட்ட மூத்த அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த அஞ்சலகத்தில் மேஜை, நாற்காலி, சோபா வசதிகளுடன் காத்திருப்பு அறை, காபி விற்பனை இயந்திரம், இலவச வைஃபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சாா்ஜிங் போா்ட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்மாா்ட் கவுன்ட்டா் அமைப்புகள், துரித அஞ்சல், பாா்சல் சேவைகளில் மாணவா்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, மாணவா்களுக்கான சேமிப்பு வங்கி சேவைகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஆதாா் சேவைகள், எண்ம கட்டண வசதிகள் உள்ளிட்ட விரிவான சேவைகள் வழங்கப்படுகின்றன.

