பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கேனும் புத்தகக் காட்சிக்குச் சென்றால் உங்களை அதிகம் வரவேற்பவை சுய முன்னேற்ற நூல்களாவே இருக்கும். ஒரு பதிப்பாளர் சீக்கிரம் பணம் பார்க்க எளிய வழியாகவும் அவையே இருந்தன. ஆனால், இப்போது காட்சி மாறுகிறது.
சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34-வது "சென்னை புத்தகக் காட்சி'யில் சந்தையில் கணிசமான இடத்தைக் கைப்பற்றி இருப்பவை மனநல மற்றும் பாலியல் கல்விப் புத்தகங்கள். மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைச் சொல்லும் புத்தகங்கள், மனச்சிதைவை எதிர்கொள்ள வழிகாட்டும் புத்தகங்கள், யோகா சொல்லிக் கொடுக்கும் புத்தகங்கள், பாலியல் சந்தேகங்களைத் தீர்க்கும் புத்தகங்கள், பாலியல் குறைபாடு சார்ந்த மன அழுத்தத்துக்கு விடைகூறும் புத்தகங்கள் சந்தையை வெகுவாக ஆக்கிரமித்திருக்கின்றன.
மொத்தமுள்ள 646 அரங்குகளில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் - குறிப்பாக சுயமுன்னேற்ற நூல்களை அதிகம் பிரசுரிக்கும் பதிப்பக அரங்குகளில் இந்த வகைப் புத்தகங்கள் கணிசமாக இடம்பெற்றிருக்கின்றன. ஒரு நாளைக்கு ஓர் அரங்கில் சுய முன்னேற்ற நூல் ஒன்று 30 பிரதிகள் விற்றால் 20 பிரதிகள் வரை மனநல மற்றும் பாலியல் புத்தகங்கள் விற்பதாகக் கூறுகின்றனர் பதிப்பாளர்கள்.
முன்பு இதெல்லாம் சாத்தியமில்லை. மனநலம் என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை வாசகர்கள் எடுத்துப் பார்ப்பதே அரிதாக இருக்கும்; பாலியல் புத்தகங்கள் என்றால் "நடிகையின் கதை' ரகப் புத்தகங்களே விற்கும். ஆனால், இப்போது தம்பதி சகிதமாக வந்து பாலியல் நாட்டமின்மைக்கான தீர்வுகளைத் தரும் புத்தகங்களை எடுக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது?
மனநல மருத்துவரும் எழுத்தாளருமான ஷாலினி, ""வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமான மாற்றம் இது'' என்கிறார். ""அத்தியாவசியத் தேவைகளுக்கான நெருக்கடியில் சமூகம் சிக்கியிருந்தபோது இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை. இப்போது வசதி வந்திருக்கிறது. எல்லா வசதிகளும் இருந்தும் ஏன் மகிழ்ச்சி இல்லை என்று யோசிக்கிறார்கள். பிரச்னைகளிலிருந்து விடுபட வழி தேடுகிறார்கள்'' என்கிறார் ஷாலினி.
பத்திரிகையாளரும் சமூகவியலாளருமான ஞாநி இதை ஆமோதிக்கிறார். ஆனால், ""இது சமூகம் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி'' என்கிறார். ""நகர்மய சூழலில் - உறவுகள் கேள்விக்குறியாகும் நிலையில் - மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் வெளிப்பாடுகளில் ஒன்று இது. அரசு இதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களிலிருந்தே இதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்'' என்கிறார் ஞாநி.
புத்தகக் காட்சி வெறும் சந்தையல்ல; அது ஒரு சமூக நிகழ்வு. ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும்போது வெளிப்படும் சிக்கல்கள் இங்கே இப்போது வெளிப்படத் தொடங்குகின்றன. வளர்ச்சி நம் உறவுகளைப் பலி கேட்கிறதா?