தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவைத் திறக்க உயர்நீதிமன்றம் தடை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவாக கட்டப்பட்டு வரும், நூற்றாண்டு விழா நினைவு வளைவை திறக்கத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவாக கட்டப்பட்டு வரும், நூற்றாண்டு விழா நினைவு வளைவை திறக்கத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தினேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜிகணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. 
மேலும் அந்தச் சாலையில் மேம்பாட்டுப் பணிகளைத் தவிர வேறு எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி சாலைகளின் குறுக்காக எந்த விதமான நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவைப் போற்ற கட்டப்பட்டு வரும் நினைவு வளைவுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 
இந்த வளைவைக் கட்டுவதற்காக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்டட அனுமதிக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த வளைவின் இரண்டு பக்கத்திலும் பொதுமக்கள் சென்றுவர 4 அடி அகலத்தில் பாதை விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
அப்போது நீதிபதிகள், இந்த வளைவு இரண்டு பக்கத்திலும் சாலையை ஆக்கிரமித்து தானே கட்டப்படுகிறது. சாலையை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறித் தானே சிவாஜி சிலையை அகற்றினீர்கள், இந்த வளைவு மட்டும் ஆக்கிரமிப்பு இல்லையா எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது நீதிபதி என்.சேஷசாயி, கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.850 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. நிலத்தை வழங்கிய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இழப்பீடாக வழங்க வேண்டிய சிறிய தொகைகளைக் கூட அரசு வழங்கவில்லை. இந்த விவகாரங்களில் அரசு தரப்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவழிக்காமல், இதுபோன்ற திட்டங்களுக்குச் செலவழிக்கிறீர்கள். 
இதைப் பற்றித் தெரிந்த எந்த அரசுத்துறை அதிகாரிகளும் வாய் திறப்பது இல்லை. இந்த ஆட்சியை மட்டும் குறை கூறவில்லை. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன் என்றார். 
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம், ஆனால் நினைவு வளைவைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.