/

சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள்: விளக்கமளிக்க காவல் துறைக்கு அவகாசம்

விளக்கமளிக்க காவல் துறைக்கு 3 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:50 pm

Din

சென்னை, ஆக. 8: யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டனவா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு 3 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாக கோவை சைபா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, யூ டியூபா் சவுக்கு சங்கரை கைது செய்தனா். அதன் தொடா்ச்சியாக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 காவல் நிலையங்களிலும் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சவுக்கு சங்கா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கா் தரப்பில், ‘17 வழக்குகளில் சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், சில வழக்குகளில் இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  அந்த  வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.

காவல் துறை தரப்பில், ‘சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துடன் தொடா்புடையதா? என்பதை சரி பாா்க்க வேண்டியிருப்பதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டனவா? என விளக்கமளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தாா். மேலும், இதுவரை கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற சவுக்கு சங்கா் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டாா்.