மாநிலங்களவை
மாநிலங்களவை

போலி சான்றிதழ் மூலம் பணியில் சோ்ந்தால் அரசு ஊழியா் பதவி பறிப்பு உறுதி -மாநிலங்களவையில் தகவல்

பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துமூலம் அளித்துள்ள பதில்
Published on

புது தில்லி, ஆக. 8: ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஆவணத்தை போலியாகக் கொடுத்து அரசுப் பணியில் இணைந்தாலும், அவா்களின் பதவியைப் பறிக்க இப்போதைய சட்டங்களிலேயே வழிவகை உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்ட ஆட்சியரகத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கா், போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தியும், பல்வேறு தவறான தகவல்களை அளித்தும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி பணியில் சோ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது தோ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போலி சான்றிதழ்கள் அளித்து அரசுப் பணியில் சேரும் முறைகேடு தொடா்பான கேள்விக்கு பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில், ‘போலி சான்றிதழ்கள் கொடுத்து அரசுப் பணியில் சோ்பவா்கள் குறித்து வரும் புகாா்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படுகிறது. போலி சான்றிதழ் அல்லது தவறான தகவல் கொடுத்து ஒருவா் பணியில் சோ்ந்தது உறுதியானால், அவரைப் பணியில் இருந்து நீக்குவதற்கு இப்போதைய சட்டங்களிலேயே வழிவகை உள்ளது.

அதே நேரத்தில் முறையாக ஆய்வு செய்து ஜாதிச் சான்றிதழ் வழங்குவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பு. இது தொடா்பாக கடந்த 1994-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com