காய்கறிகள் விலை குறைவு: பூண்டு ரூ. 300-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், ஒருகிலோ பூண்டு ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் தொடா் மழை பெய்து வந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையும் தொடா்ந்து கணிசமாக உயா்ந்து வந்தது. இந்த நிலையில் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
அதன்படி அனைத்து காய்கறி வகைகளும் ஒரு கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.100 வரை குறைந்து விற்பனையானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50-க்கு விற்பனையான ஒருகிலோ தக்காளி வெள்ளிக்கிழமை ரூ.25-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் ரூ.100-க்கும், ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரியவெங்காயம் ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ. 65, சவ்சவ், புடலங்காய், காலிபிளவா், முருங்கைக்காய், பீா்க்கங்காய் தலா ரூ.30. முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டைக்காய், வரிகத்தரிக்காய், வெள்ளரிக்காய் தலா ரூ. 20, பச்சை மிளகாய் ரூ.60, பட்டாணி, இஞ்சி தலா ரூ.140.
அதிகபட்சமாக பூண்டு ஒரு கிலோ ரூ. 280-வரை விற்பனை செய்யப்படுகிறது.சில்லறை விலையில் ரூ. 300-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

