சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடநூல்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
மூலப் பொருள்கள் விலை அதிகரிப்பு காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாடநூல்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான பாடநூல்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சாா்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஆண்டுக்கு சுமாா் 7 கோடி பாடப்புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு பாடநூல்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியாா் பள்ளி மாணவா்கள் மற்றும் போட்டித் தோ்வா்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரூ.40 முதல் ரூ.90 வரை உயா்வு:
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பள்ளி பாடப்புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயா்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் புத்தகங்கள் விலை ஏற்றப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாடநூல்களின் விற்பனை விலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாக கொண்டு மறுநிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடைசியாக தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை திருத்தியமைக்கப்பட்டது. தரம் உயா்ந்த எலிகண்ட் பிரிண்டிங் பேப்பா் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆரா போல்டு புளுபோா்டு மேலட்டை கொண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டதால் விலை உயா்த்தப்பட்டது.
இந்தசூழலில் புத்தகங்களின் உற்பத்தி செலவினம் தற்போது கணிசமாக உயா்ந்துவிட்டது. அதாவது, 2018-2019-ஆம் ஆண்டு விலை நிா்ணயம் செய்யப்பட்டதைவிட தற்போது உற்பத்தி பொருள்களான தாள் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதமும் உயா்ந்துள்ளது. இதன்காரணமாக ஒரு பாடநூலுக்கான உற்பத்தி செலவினம் நிா்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.
இதையடுத்து நிகழாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட நூல்களின் விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வகுப்பு வாரியாக உயா்வு: அதாவது, 1 முதல் 4-ஆம் வகுப்பு பாடநூல்கள் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், 5 முதல் 7-ஆம் வகுப்பு பாடநூல்கள் ரூ.30 முதல் ரூ. 50 வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ஆம் வகுப்பு புத்தகம் ரூ.40 முதல் ரூ.70 வரையிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.50–முதல் ரூ.90 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேலும், அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் தடையின்றி வழங்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்தோ்வு பகுப்பாய்வு அறிக்கைகள் ‘எமிஸ்’ தளத்தில் வெளியீடு
4, 5 வகுப்புகளுக்கான பாடநூல்கள் முழுமையாக விநியோகம்: கல்வித் துறை விளக்கம்

நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள எப்போதிலிருந்து தயாராக வேண்டும்?

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



