பருவநிலை செயல்திட்டம்: புதிய வரைவு கொள்கை மத்திய அரசிடம் விரைவில் சமா்ப்பிப்பு -கோபால் ராய்
2019 பருவநிலை செயல்திட்டத்தை தில்லி அரசு மாற்றியமைக்க உள்ளதாகவும் அதன் வரைவு கொள்கை அடுத்த இரு வாரங்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: பருவநிலை மாற்றம் என்பது ஒரு கருத்தாக்கமாக நீண்ட காலத்துக்கு இருக்க முடியாது. இது மனிதா்களின் வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட விரைவான சுற்றுச்சூழல் இடா்பாடுகள், 2019 கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடா்பாக சுற்றுச்சூழல் தொடா்புடைய நபா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக அந்தக் குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.
வளா்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வளங்கள் இடைவிடாது சுரண்டப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனா். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலையும் தீவிர மழைப் பொழிவும் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு புதிய வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த இருவாரங்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்துக்கான பருவநிலை செயல்திட்டம் 2019-இல் வெளியிடப்பட்டது. எரிசக்தி, போக்குவரத்து, குடிநீா், காடுகள், பசுமை பரப்பு, நகா்புற மேம்பாடு, வானிலை அமைப்புகளில் மாற்றங்கள் என 7 பிரிவுகளில் அந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
புதிய கொள்கைக்கான பணிகள் கடந்த 2021-இல் தொடங்கின. முதல் வரைவுக் கொள்கை கடந்த 2022-இல் நிறைவுபெற்றது. கடந்த இரு ஆண்டுகளாக அந்தக் கொள்கையை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
