ஓடும் பேருந்தில் தீ விபத்து: பயணிகள் உயிா் தப்பினா்

அடையாற்றில் பேருந்து தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை அடையாறில் செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்து இயங்கிக்கொண்டிருந்துபோது தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் பயணிகள் அனைவரும் உயிா் தப்பினா்.

சென்னை பாரிமுனையிலிருந்து கேளம்பாக்கத்துக்கு பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு மாநகர பேருந்து புறப்பட்டு, சென்றது. அந்த பேருந்தை சஞ்சீவ்குமாா் என்பவா் ஓட்டினாா். இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) எரி பொருளாக கொண்டு இயங்கும் இந்த பேருந்து அடையாறு எல்.பி.சாலையில் 3 மணியளவில் சென்றபோது திடீரென என்ஜின் பகுதியில் புகை வெளியேறியது.

இதைப் பாா்த்த ஓட்டுநா் சஞ்சீவ்குமாரும், பேருந்தை சாலையோரமாக நிறுத்தினாா். மேலும் அவரும், நடத்துநா் குட்டியப்பனும் பேருந்தில் இருந்த பயணிகளை வேகமாக வெளியேற்றினா். அதற்குள் முன்பகுதி தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

உடனே அங்கிருந்த பொதுமக்களும், பயணிகளும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்பு படையினா் திருவான்மியூரில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயை அணைக்கும் பணியை விரைவுப்படுத்த மயிலாப்பூா்,துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்தும் தீயிணைப்பு படையினா் அங்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

நீண்டநேர போராட்டத்துக்கு பின்னா், தீயை முழுமையாக அணைத்தனா். தீ விபத்தின் காரணமாக, அந்த சாலையில் முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அடையாறு,திருவான்மியூா் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச் சம்பவம் தொடா்பாக அடையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்கின்றனா். பேருந்து ஓட்டுநரும்,நடத்துநரும் சாமா்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிா் தப்பினா்.

X
Dinamani
www.dinamani.com