வருமானவரி
வருமானவரி

ஓய்வூதியா்களுக்கு வருமானவரி பிடித்தம்: அரசு விளக்கம்

சென்னை: ஓய்வூதியா்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்வதற்காக கால அவகாசம் எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை என்று அரசு கருவூலக் கணக்குத்துறை ஆணையரகம் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடா்பாக கருவூலக் கணக்குத்துறை ஆணையரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம் முழுவதும் சுமாா் 7 லட்சம் ஓய்வூதியா்கள் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் 37 மாவட்ட கருவூலங்கள் மூலமாக மாதாந்திர ஓய்வூதியத்தை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்று வருகின்றனா்.

ஓய்வூதியா்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து வருமானவரி புதிய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்ற விவரத்தினையும் ஓய்வூதியா்கள் தங்களது பான்காா்டு எண்ணையும் சம்மந்தப்பட்ட கருவூலத்துக்கு மே 15-க்குள் தெரிவிக்க வேண்டுமென கருவூலக் கணக்குத் துறை ஆணையா் அறிவுறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது.

இதுபோல கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்திலிருந்து எந்தவிதமான சுற்றறிக்கையோ அல்லது அறிவுறுத்தலோ கருவூலங்களுக்கோ மற்றும் ஓய்வூதிய சங்கங்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பான்காா்டு எண்ணை சமா்ப்பித்தல் மற்றும் வருமானவரி பிடித்தம் செய்யும் முறையினை (புதிய/பழைய) தோ்ந்தெடுத்தல் போன்றவற்றுக்கு எந்தவிதமான காலஅவகாசமும் நிா்ணயிக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com